சிறப்பு ரெயிலில் ஆயிரம் டன் உரம் வந்தது


சிறப்பு ரெயிலில்  ஆயிரம் டன் உரம் வந்தது
x
தினத்தந்தி 21 Nov 2021 5:30 PM GMT (Updated: 21 Nov 2021 5:30 PM GMT)

உரத்தட்டுப்பாடு என விவசாயிகளின் புகார் எதிரொலியாக அமைச்சர் ராஜகண்ணப்பன் நடவடிக்கையால் ராமநாத புரத்திற்கு சிறப்பு ரெயிலில் ஆயிரம் டன் யூரியா உரங்கள் கொண்டுவரப்பட்டன.

ராமநாதபுரம், 
உரத்தட்டுப்பாடு என விவசாயிகளின் புகார் எதிரொலியாக அமைச்சர் ராஜகண்ணப்பன் நடவடிக்கையால் ராமநாத புரத்திற்கு சிறப்பு ரெயிலில் ஆயிரம் டன் யூரியா உரங்கள் கொண்டுவரப்பட்டன.
பருவழை
ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. ஆண்டு சராசரி அளவை கடந்து இதுவரை 877 மி.மீ. மழை பெய்துள்ளது. இதில் வடகிழக்கு பருவமழை மட்டும் 427 மி.மீ பெய்துள்ளது. 3.26 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. நெற்பயிர்கள் 45 முதல் 60 நாட்கள் பயிராக உள்ளது.
மாவட்டத்திற்கு தேவையான யூரியா, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங் களிலும் இருப்பு வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
களை எடுத்தல், உரமிடுதல் ஆகிய பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் இந்த சமயத்தில் மேலுரம் இடுவதற்கு தேவைப்படும் ரசாயன உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் யூரியா 2,201 டன், டி.ஏ.பி. 364 டன், பொட்டாஷ் 170 டன், காம்ப்ளக்ஸ் 1,785 டன் இருப்பு உள்ளது.யூரியா உரம் மொத்தம் 13,390 டன் வரப்பெற்றது.
புகார்
இதுவரை 11,584 டன் விற்பனை செய்யப்பட்டுஉள்ளது. இந்த நிலையில் உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் ராஜகண்ணப்பன், கலெக்டர் சங்கர்லால் குமாவத் ஆகியோரின் தொடர் நடவடிக்கையால் ஆயிரம் டன் இப்கோ யூரியா உரம் ராமநாதபுரத்திற்கு நேற்று சிறப்பு ரெயில் மூலம் கொண்டுவரப்பட்டது.
இதனை தொடர்ந்து அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் இன்று முதல் விவசாயி களுக்கு யூரியா விற்பனை செய்யப்படும். எனவே விசாயிகள் யூரியா உரத்தினை தங்கள் பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் அரசு நிர்ணயித்த விலையில் தேவைக்கு ஏற்ப பெற்று கொள்ளலாம். மேலும், உர விற்பனையாளர்கள் விவசாயிகள் கேட்காத எந்த ஒரு உரத்தையும் இணைப்பு உரங்களாக விற்பனை செய்யக்கூடாது. 
நடவடிக்கை
எவரேனும் அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்தாலோ இணைப்பு உரங்களை வாங்குவதற்கு விவசாயிகளை கட்டாயப் படுத்தினாலோ அல்லது உரிய ரசீது வழங்காமல் உர விற்பனை செய்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் டாம்சைலஸ் தெரிவித்துள்ளார்.

Next Story