வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட தரைப்பாலம். 18 கிராம மக்கள் அவதி
வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட தரைப்பாலம்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே உள்ள குரிசிலாப்பட்டு ஊராட்சி, சுமார் 18 குக்கிராமங்கள் அடங்கிய பகுதியாகும். இக்கிராமத்திற்கு கிழக்கு நோக்கி ஊரையொட்டி பாம்பாறு ஓடுகிறது. இந்த ஆற்றில் உள்ள இரண்டு தரை பாலங்கள் வழியாக தளுகன் வட்டம், காரைகிணறு, பாபுகொல்லை, பூசாரி வட்டம், பள்ளத்தூர், வேப்பமரத்து வட்டம், கவுண்டர் வட்டம், ஜொள்ளகவுண்டனூர் போன்ற கிராம வாசிகள் சென்று வருகின்றனர். இந்த பகுதியில் 2 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. ஆற்றை கடந்தால்தான் மேற்கண்ட கிராம பகுதியிலிருந்து பள்ளிக்கு செல்ல முடியும்.
அன்றாட தேவைகளான காய்கறிகள், பால் போன்ற முக்கிய உணவு பொருட்கள் மேற்கண்ட கிராமங்களில் இருந்தே கொண்டு வரப்பட்டது. வனத்துறைக்கு சொந்தமான சிறு அலுவலகமும் இந்த பகுதியில் உள்ளது.
தென் மேற்கு பருவமழை காலமான கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்தே தொடர்மழை காரணமாக பாலத்தின் வழியாக தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் தற்போது பெய்த மழை காரணமாகவும் ஆண்டியப்பனூர் ஓடை நீர்தேக்கம் நிரம்பி திறந்து விடப்பட்டதாலும் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த பல நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக முக்கிய இரண்டு தரை பாலங்களும் குறுகிய காலத்திலேயே உடைந்து விட்டன.
உடைந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதால் போக்குவரத்து அடியோடு நின்று விட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story