புதுக்கோட்டை அருகே பயங்கரம் ஆடு திருடியவர்களை விரட்டி சென்றபோது சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி உதவி
புதுக்கோட்டை அருகே ஆடு திருடியவர்களை பிடிக்க விரட்டி சென்றபோது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1 கோடி நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
கீரனூர்:
சப்-இன்ஸ்பெக்டர்
இது தொடர்பாக பொதுமக்கள் நவல்பட்டு போலீசில் புகார் தெரிவித்திருந்தனர். அதன்படி ஆடு திருடர்களை பிடிக்க நவல்பட்டு போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் (வயது 50), ஏட்டு சித்திரைவேல் ஆகியோர் தனித்தனி மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் நவல்பட்டு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பூலான்குடி காலனி பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் ஆட்டை திருடி கொண்டு வந்துள்ளனர். அவர்களை பூமிநாதன், சித்திரைவேல் ஆகியோர் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் மர்மநபர்கள் தப்பிச்சென்றனர். உடனடியாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தனது மோட்டார் சைக்கிளில் அவர்களை பின்தொடர்ந்து வேகமாக விரட்டினார். மர்மநபர்கள் பூலான்குடியில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் நோக்கி செல்வதற்காக வேகமாக வந்தனர். பூமிநாதனும் அவர்களை விடாமல் மோட்டார் சைக்கிளில் வேகமாக துரத்தி சென்றார். அவரை பின் தொடர்ந்து ஏட்டு சித்திரைவேலும் விரட்டி சென்றார்.
அரிவாளால் வெட்டிக்கொலை
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் பள்ளத்துப்பட்டியில் இருந்து திருச்சி செல்லும் ரோட்டில் சுரங்கபாதையில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் மர்மநபர்களால் அங்கிருந்து தப்பிச்செல்ல முடியவில்லை. துணிச்சலுடன் சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் விரட்டி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன், ஆடு திருடர்களை மடக்கி பிடித்தார். இதைத்தொடர்ந்து 2 பேர் பிடிபட்டது குறித்து தனது பின்னால் வந்த போலீஸ்காரர் சித்திரைவேலுக்கு செல்போன் மூலம் அவர் தகவல் தெரிவித்தார். மேலும் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் குளத்தூரில் உள்ள சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகருக்கு இடத்தை தகவல் தெரிவித்து வருமாறு கூறினார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனின் தலை மற்றும் கழுத்தில் ஆடு திருடர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் துடிக்க, துடிக்க சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனடியாக மர்மநபர்கள் 2 பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஆட்டுடன் தப்பியோடினர்.
போலீஸ் அதிகாரிகள்
இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகர், ஏட்டு சித்திரைவேல் ஆகியோர் வந்த போது பூமிநாதன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து நவல்பட்டு போலீசாருக்கும், உயர் அதிகாரிகளுக்கும், கீரனூர் போலீசாருக்கும் அவர்கள் தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் நடைபெற்ற போது நள்ளிரவு 2.30 மணி இருக்கும் எனக்கூறப்படுகிறது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் போலீசார் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரத்த வெள்ளத்தில் அவரது உடல் அப்படியே நேற்று காலை வரை கிடந்தது. அவர் விரட்டி வந்த மோட்டார் சைக்கிள் நிறுத்தியபடி இருந்தது. சம்பவ இடத்திற்கு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரும், மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பொறுப்புமான கார்த்திகேயன், திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொறுப்புமான சுஜித்குமார் மற்றும் கீரனூர் போலீசார், அதிகாரிகள் நேற்று அதிகாலை விரைந்து வந்தனர். மேலும் நூற்றுக்கணக்கான போலீசாரும், அதிவிரைவு படையினரும் அந்த இடத்தில் குவிக்கப்பட்டனர். பொதுமக்கள் கூட்டமும் அப்பகுதியில் கூடியது.
8 தனிப்படைகள்
கொலையான பூமிநாதனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வேனில் போலீசார் அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் கொலையாளிகளின் தடயம் எதுவும் சிக்குகிறதா? என போலீசார் சல்லடை போட்டு தேடினர். மேலும் அக்கம் பக்கத்தில் மறைந்துள்ளார்களா? என தீவிரமாக போலீசார் தேடினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டன. நாய் அந்த இடத்தை மோப்பம் பிடித்து சிறிது தூரம் சென்று நின்றது. மோப்ப நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 8 தனிப்படைகள் உடனடியாக அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த இடம் அருகே மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திருச்சி மாவட்ட எல்லைப்பகுதிகளிலும் மர்மநபர்களை வலைவீசி தேடினர்.
கண்காணிப்பு கேமராக்கள்
இதற்கிடையில் புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ஆடுதிருட்டில் ஈடுபடும் நபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். பக்கத்து மாவட்டங்களுக்கும் போலீசார் தகவல் தெரிவித்து விசாரிக்க கூறினர். மர்மநபர்களை போலீசார் விரட்டி வந்த வழியாக பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர்.
இதில் ஆடு திருடர்களை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் விரட்டி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. அதனை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கொலையான பூமிநாதனுக்கு கவிதா என்ற மனைவியும், சுதன் (21) என்ற மகனும் உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துணிச்சலுடன் சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்
ஆடு திருடர்களை பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் துணிச்சலுடன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தனது மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்றுள்ளார். சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் விடாமல் அவர் பின்தொடர்ந்து விரட்டியிருக்கிறார். அவர் தன்னந்தனியே இருந்த போதும் ஆடு திருடர்களை மடக்கி பிடித்திருக்கிறார். ஆனால் துரதிஷ்டவசமாக அவரை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது சக போலீசாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பூமிநாதன் போலீஸ் துறையில் கடந்த 1995-ம் ஆண்டு திருச்சியில் பணியில் சேர்ந்துள்ளார். அவர் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி உள்ளார். அவரது சொந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஆகும். திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் கடந்த ஆண்டு (2020) ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் பணியாற்றி வந்திருக்கிறார். நவல்பட்டு பகுதியில் சோழமாநகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். மனைவி குடும்பதலைவி ஆவார். மகன் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
சீருடை முழுவதும் ரத்தக்கறை
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனின் தலை மற்றும் கழுத்தில் அரிவாளால் வெட்டப்பட்டதில் ரத்தம் அதிகம் வெளியேறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவர் அணிந்திருந்த சீருடையில் சட்டை முழுவதும் ரத்தக்கறை படிந்திருந்ததோடு, உடலை சுற்றி ரத்தம் வெள்ளம் காணப்பட்டது. அவர் அணிந்திருந்த தொப்பி அருகில் உள்ள தண்ணீரில் மிதந்து கிடந்தது. காலணியில் ஒரு ஷு தனியாக கழன்று கிடந்தது.
செல்போன் சிக்னல் மூலம் விசாரணை
சம்பவம் நடந்த இடத்தின் அருகே மற்றும் நவல்பட்டு பகுதியில் செல்போன் எண்கள் பயன்படுத்தப்பட்டதில் டவர் சிக்னலில் பதிவானதை கண்டுபிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் சந்தேகப்படும்படி இருந்த எண்களை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
வழி தவறி சென்ற ஏட்டு
ஆடு திருடர்களை பின்தொடர்ந்து பூலான்குடி காலனியில் இருந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வந்த போது அவரது பின்னால் ஏட்டு சித்திரைவேல் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். ஆனால் அவர் பூமிநாதனை பின்தொடர்ந்து வரும் போது வழி தவறி சென்றதாக கூறப்படுகிறது. அந்த சாலை கிராமப்புறங்கள் வழியாக வளைந்து, வளைந்து செல்லக்கூடியதாகும். இதனால் அவர் வழிதெரியாமல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை பின்தொடரமுடியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
மழைநீர் தேக்கத்தால் சுரங்கபாதை அடைப்பு
பள்ளத்துப்பட்டி கிராமத்தில் உள்ள ரெயில்வே சுரங்கபாதையில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த பாதையில் பொதுமக்கள் யாரும் வாகனங்களில் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கற்கள் வைத்தும், சிவப்பு நிற துணி கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஆடு திருடர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த போது சுரங்கபாதையில் மழைநீரால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது தான் பின்தொடர்ந்து வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தைரியமாக தனி ஒரு ஆளாக 2 பேரையும் பிடித்து விட்டு சக போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். ஆனால் போலீசாரிடம் சிக்கி கொண்டால் கைதாகிவிடுவோம் என கருதி இரக்கமில்லாமல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை படுகொலை செய்துவிட்டு ஆடு திருடர்கள் தப்பிச்சென்றிருக்கின்றனர்.
கைத்தேர்ந்த ஆடு திருடர்கள்
ஆடுகளை திருடி இறைச்சி கடைகளுக்கு விற்பனை செய்யும் கும்பல் நடமாட்டம் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் ஆடுகளை லாவகமாக திருடி மோட்டார் சைக்கிளில் வைத்து தப்பிச்செல்வதை வாடிக்கையாக கொண்டவர்கள் தான் நேற்று முன்தினமும் நவல்பட்டு பகுதியில் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இதனால் கைத்தேர்ந்த ஆடு திருடும் கும்பல் தான், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனை கொலை செய்திருக்கலாம் என கருதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story