செந்துறை பகுதியில் 2 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது


செந்துறை பகுதியில் 2 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது
x
தினத்தந்தி 22 Nov 2021 12:08 AM IST (Updated: 22 Nov 2021 12:08 AM IST)
t-max-icont-min-icon

செந்துறை பகுதியில் பெய்த கனமழையால் 2 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. மேலும், ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டது.

செந்துறை,
ராயம்புரம் ஏரி
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ராயம்புரம் ஏரி 300 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியை சுற்றி ராயம்புரம், கீழ ராயம்புரம், சென்னிவனம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியில் நீர் மட்டத்திற்கு ஏற்றார்போல் தடுப்பு சுவர்களும் வடிகால் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் கூடுதல் நீரை தேக்க வேண்டும் என்று இந்த ஏரியின் மூலம் பாசன வசதி பெறும் ஆதிக்குடிக்காடு கிராம விவசாயிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அணை போட்டு தடுப்புகளை அமைத்து சுமார் 5 அடி வரை உயர்த்தி உள்ளனர்.
ஏரிகளில் உடைப்பு
தற்போது மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அனைத்து ஏரி, குளங்களும் நிரம்பி வழிகிறது. நேற்று முன்தினம் இரவு நள்ளிரவில் திடீரென 2 மணி நேரத்தில் 75 மி.மீ. அளவிற்கு மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஏரிக்கு வந்த மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி நல்லாம்பாளையம் மற்றும் பிலாக்குறிச்சி ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டது.
செந்துறை பெரிய ஏரியில் இருந்து அருவி போல் ஆர்ப்பரித்து ஓடிய மழை நீரால் சந்தை பகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது.
வெள்ளம் சூழ்ந்தது
அதேபோல் ராயம்புரம் பெரிய ஏரி பகுதியில் உள்ள கீழராயம்புரம், சென்னிவனம் கிராமங்களில் சில பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. மேலும் அங்கு பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர்கள் மற்றும் கோவில் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி குளம் போல் காட்சி அளித்தது. இதனால் கிராம மக்கள் இரவு நேரத்தில் வெளியே வரமுடியாமல் தவித்தனர்.
இதனைதொடர்ந்து பொதுமக்கள் சிலர் விரைந்து சென்று வடிகால் வாய்க்காலில் அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகளை மண் வெட்டி மூலம் சிறிதளவு அகற்றினர். இதனால் தண்ணீர் வடிய தொடங்கியது. 
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி பிலாக்குறிச்சி கிராமத்தில் உடைப்பு ஏற்பட்ட ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுகுறித்து கீழராயபுரம் பொதுமக்கள் கூறுகையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அரசால் அமைக்கப்பட்ட வடிகால் வாய்க்காலின் உயரத்தை அதிகரிக்காமல் கண்காணிக்க வேண்டும். தவறினால் விவசாயிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

Next Story