குடியாத்தம் அருகே நெல்லூர்பேட்டை ஏரிக்கரை 50 மீட்டர் தூரத்திற்கு பூமியில் இறங்கியது


குடியாத்தம் அருகே  நெல்லூர்பேட்டை ஏரிக்கரை 50 மீட்டர் தூரத்திற்கு பூமியில் இறங்கியது
x
தினத்தந்தி 22 Nov 2021 12:12 AM IST (Updated: 22 Nov 2021 12:12 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே நெல்லூர் பேட்டை ஏரிக்கரை 50 மீட்டர் தூரத்திற்கு பூமியில் இறங்கியது. அதை மணல்மூட்டை கொண்டு சீரமைத்தனர்.

குடியாத்தம்

குடியாத்தம் அருகே நெல்லூர் பேட்டை ஏரிக்கரை 50 மீட்டர் தூரத்திற்கு பூமியில் இறங்கியது. அதை மணல்மூட்டை கொண்டு சீரமைத்தனர்.

நெல்லூர்பேட்டை ஏரி

வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரி குடியாத்தம் நெல்லூர்பேட்டை பெரிய ஏரி ஆகும். சுமார் 400 ஏக்கர் பரப்பளவும், 100 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது இந்த ஏரி.
மோர்தானா அணை நிரம்பி வலதுபுற கால்வாய் மூலம் வரும் நீரால் நெல்லூர்பேட்டை பெரிய ஏரி ஒரு மாதத்திற்கு முன்பே நிரம்பி வழிந்து வருகிறது. கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழையால் எர்த்தாங்கல் மற்றும் மொரசபல்லி கொட்டாற்றிலிருந்து சில நாட்களாக சுமார் 600 கனஅடி தண்ணீர் நெல்லூர்பேட்டை பெரிய ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.

பூமிக்குள் இறங்கியது

 இந்தநிலையில் நேற்று காலையில் குடியாத்தம் அடுத்த செருவங்கி ஊராட்சி கார்த்திகேயபுரம் பகுதியில் உள்ள ஏரிக்கரை சுமார் 50 மீட்டர் நீளத்திற்கு 50 அடி கீழே இறங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், அமலுவிஜயன் எம்.எல்.ஏ., தாசில்தார் லலிதா, குடியாத்தம் நகர தி.மு.க. பொறுப்பாளர் சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பார்வையிட்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிறிந்த வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு போர்க்கால அடிப்படையில் சீர் செய்யுமாறு உத்தரவிட்டார். மேலும் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. உடனடியாக கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கரையை சீர் செய்யுமாறும், அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

மணல் மூட்டை கொண்டு சீரமைப்பு

நீர்வள ஆதாரத்துறை வேலூர் கோட்ட செயற்பொறியாளர் ரமேஷ், குடியாத்தம் உதவி கோட்ட பொறியாளர் குணசீலன், உதவி பொறியாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் 100 பணியாளர்களுடன் சென்று பொக்லைன் எந்திரம், மண்வாரி எந்திரம் மூலம் 5 ஆயிரம் மணல் மூட்டைகளை 200 சவுக்கு கட்டைகள் கொண்டு சீல் பவுண்டேஷன் முறையில் நேற்று இரவு வரை தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் மணல் குடியாத்தம் நகராட்சிக்கு சொந்தமான உள்ளி உர கிடங்கிலிருந்து 25 பேர் நேற்று காலை முதல் மணல் மூட்டைகளை கட்டி 10 டிராக்டர்கள் மூலம் ஏரிக்கரை பகுதிக்கு அனுப்பி வைத்தனர். இந்த ஏரிக்கரை பழுதானால் அதில் இருந்து வெளியேறும் வெள்ளத்தால் கார்த்திகேயபுரத்தின் ஒரு பகுதி, செருவங்கி அண்ணா நகர், குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட செருவங்கி, காமாட்சியம்மன் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழும் அபாயம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

அதிகாரிகள் அசம்பாவிதம் ஏதும் நடைபெறா வண்ணம் போர்க்கால அடிப்படையில் பணிகள் செய்து வருவதாகவும், பயப்படும் படி எதுவும் நடைபெறாது எனவும் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

Next Story