குளிர்பானம் குடித்த மாணவி சாவு


குளிர்பானம் குடித்த மாணவி சாவு
x
தினத்தந்தி 22 Nov 2021 1:04 AM IST (Updated: 22 Nov 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

பணகுடி அருகே குளிர்பானம் குடித்த மாணவி பரிதாபமாக இறந்தாள்.

வடக்கன்குளம்:
பணகுடி அருகே குளிர்பானம் குடித்த மாணவி பரிதாபமாக இறந்தாள்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

9-ம் வகுப்பு மாணவி

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பழவூர் சிவஞானபுரத்தை சேர்ந்தவர் வசந்த். கூலித்தொழிலாளி. இவருக்கு 2 மகள்கள் உண்டு. மூத்த மகள் இந்துஜா (வயது 14). இவள் ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி வசந்த் தனது குடும்பத்துடன் வெளியில் சென்றார். ஊரில் உள்ள ஒரு குளிர்பான கடையில் அனைவரும் குளிர்பானம் குடித்தனர்.

வாந்தி-மயக்கம்

பின்னர் அனைவரும் வீட்டிற்கு வந்தனர். அப்போது, இந்துஜாவுக்கு திடீரென்று வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.  அவர்கள் இந்துஜாவை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சாவு

இந்த நிலையில் கடந்த 2 மாதமாக ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இந்துஜா நேற்று பரிதாபமாக உயிரிழந்தாள். 
இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குளிர்பானம் குடித்ததால் தான் மாணவி உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். எனினும் பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னரே மாணவி சாவுக்கான முழு காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். பணகுடி அருேக குளிர்பானம் குடித்த மாணவி இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story