மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மந்திரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் - பசவராஜ் பொம்மை உத்தரவு
கர்நாடகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மந்திரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டு உள்ளார்.
பெங்களூரு:
வரலாறு காணாத மழை
வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு நிலைகளால் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கர்நாடகத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் கோலார், சிக்பள்ளாப்பூர், துமகூரு, பெங்களூரு, ராமநகர், மண்டியா, மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக சிக்பள்ளாப்பூர், கோலார் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தததை அடுத்து நீண்ட காலமாக வறண்டு இருந்த ஏரிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. சில ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதால், அவை ஊருக்குள் புகுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த மழைக்கு 20-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். சில பகுதிகளில் குடியிருப்பு கட்டிடங்களும் இடிந்து விழுந்துள்ளன. இதனால் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த மழை பாதிப்புகள் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மந்திரிகள் ஆய்வு
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் முடிந்துவிட்டது. தற்போது பருவம் தவறி பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அந்தந்த மாவட்டங்களின் பொறுப்பு மந்திரிகள் உடனடியாக நேரில் சென்று ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். சேதங்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அவற்றுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும்.
கர்நாடக மேல்-சபை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், மந்திரிகள் ஆய்வு செய்ய முடியாத நிலை இருந்தது. இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் பேசினேன். அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி முடிவு எடுக்க அனுமதிக்குமாறு கேட்டுள்ளேன். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு தலைமை செயலாளரும் கடிதம் எழுத இருக்கிறார்.
மேம்பாலங்கள் பாதிப்பு
மழையால் சேதம் அடைந்த பயிர்கள் குறித்து ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த ஆய்வு பணியின் முதல்கட்ட அறிக்கை இன்று (நேற்று) மாலைக்குள் எனக்கு கிடைக்கும். அதன் அடிப்படையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து அறிவிக்கப்படும். தென் கர்நாடகம், வட கர்நாடகத்தின் உள் மாவட்டங்களில் அதிகளவில் மழை பெய்து பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. சாலைகள், மேம்பாலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மழைக்கு பலர் உயிரிழந்துள்ளனர்.
சமீபத்தில் மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதங்களை ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டுள்ளேன். சில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆய்வு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. கடந்த ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் பெய்த மழைக்கு 3 லட்சம் விவசாயிகளின் பயிர்கள் சேதம் அடைந்தன. அவற்றுக்கு ஏற்கனவே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ரூ.130 கோடி நிலுவையில் உள்ளது. அதையும் உடனடியாக விடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
சாலைகள் சீரமைப்பு
பெங்களூருவில் மழையால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை நான் ஏற்கனவே நேரில் ஆய்வு செய்தேன். வரும் நாட்களிலும் இத்தகைய ஆய்வு பணிகளை மேற்கொள்வேன். நாங்கள் பெங்களூருவின் நலனை கவனத்தில் கொண்டுள்ளோம். மழை நின்றதும் சாலைகளை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story