நண்பர்களுடன் குளித்தபோது கடலில் மூழ்கி வாலிபர் சாவு


நண்பர்களுடன் குளித்தபோது கடலில் மூழ்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 22 Nov 2021 2:34 AM IST (Updated: 22 Nov 2021 2:34 AM IST)
t-max-icont-min-icon

புதுவைக்கு சுற்றுலா வந்த வாலிபர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

புதுச்சேரி, நவ.22-
புதுவைக்கு சுற்றுலா வந்த வாலிபர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சுற்றுலா வந்தனர்
சேலம் எடப்பாடி தாலுகா கொங்கணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் கவுதம் (வயது 21). அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகன் சஞ்சய் (20). இவர்கள் இருவரும், நண்பர்கள் 10 பேருடன் நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். 
அவர்கள் கடற்கரை அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர். நேற்று மதியம் 2 மணி அளவில் கவுதம், சஞ்சய் மற்றும் அவரது நண்பர்கள் பழைய துறைமுகம் பாலத்தின் அருகே கடலில் ஆனந்தமாக குளித்துக்கொண்டிருந்தனர்.
வாலிபர் சாவு
அப்போது கடலில் எழுந்த ராட்சத அலை கவுதம், சஞ்சய் ஆகியோரை கடலுக்குள் இழுத்துச்சென்றது. இதை பார்த்த நண்பர்கள் காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த மீனவர்கள் ஓடிவந்தனர். அவர்கள் கடலில் தத்தளித்த கவுதம், சஞ்சய் ஆகியோரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் இருவரும் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கவுதம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் சஞ்சய் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக கவுதம், சஞ்சய் ஆகியோரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நேற்றிரவு புதுவை வந்தனர். இது தொடர்பாக ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story