ராட்சத அலையில் சிக்கி மாணவன் சாவு
மணக்குடி கடலில் நண்பர்களுடன் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி மாணவன் பரிதாபமாக இறந்தார்.
மேலகிருஷ்ணன்புதூர்:
மணக்குடி கடலில் நண்பர்களுடன் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி மாணவன் பரிதாபமாக இறந்தார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மாணவன்
நாகர்கோவில் அருகே மணக்குடியை சேர்ந்தவர் அலெக்ஸ் விஜயன். இவர் வெளிநாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருடைய மகன் அஜன் கிளாமிஸ் (வயது 16).
10-ம் வகுப்பு முடித்த இவர் ஐ.டி.ஐ.யில் சேர்ந்து படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் மணக்குடி கடலில் நண்பர்களோடு அஜன் கிளாமிஸ் உற்சாகமாக குளித்து கொண்டிருந்தார்.
ராட்சத அலை இழுத்து சென்றது
அப்போது திடீரென எழுந்து வந்த ராட்சத அலையில் அவர் சிக்கி கொண்டார். வந்த வேகத்தில் அவரை சுருட்டிக் கொண்டு உள்ளே சென்றது. உடனே நண்பர்கள் அவரை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. உடனே காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டபடி மீனவர்களின் உதவியை நாடினர்.உடனே அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த மீனவர்கள் ஓடி வந்து கடலுக்குள் இறங்கி சென்றனர். பின்னர் படகில் சென்று தூண்டில் வளைவு பகுதியில் வலையை விரித்து தேடினர்.
பிணமாக மீட்பு
சுமார் 2 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு மீனவர்கள் விரித்த வலையில் அஜன் கிளாமிஸ் உடல் சிக்கியது. பிணமாக மீட்கப்பட்ட மாணவனின் உடலை பார்த்து நண்பர்களும், உறவினர்களும் கதறி அழுதனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இது கடற்கரை பகுதி என்பதால் குளச்சல் கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே அவர்கள் விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நண்பர்கள் கண் எதிரே கடல் அலை இழுத்து சென்று மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story