பஸ் நிலையத்தில் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல்
பஸ் நிலையத்தில் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல் செய்தனர்.
தா.பேட்டை:
தா.பேட்டையில் பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் மழைநீர் தேங்கி காட்சியளித்தது. இதுகுறித்து அப்பகுதியினர் பேரூராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் குழிகளில் மண் கொட்டி சமன்படுத்தி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில் தா.பேட்டை பகுதியில் தொடர் மழை பெய்தது. மேலும் நாமக்கல், துறையூர், முசிறி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வந்து சென்றதால் சீரமைக்கப்பட்ட சாலை சேறும், சகதியுமாக மாறியது. இதனால் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள கடைகள் நடத்தி வருபவர்கள் மற்றும் பஸ் நிலையத்திற்கு சென்ற பயணிகள் உள்ளிட்டோர் பெரிதும் அவதி அடைந்தனர். இருசக்கர வாகனங்கள் கூட செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பஸ் நிலைய வளாகத்தில் கடைகள் நடத்தி வருபவர்கள் மற்றும் பொதுமக்கள் தா.பேட்டையில் துறையூரில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற பஸ்களை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தா.பேட்டை போலீசார் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி, கலைந்து போகச்செய்தனர். மேலும் பேரூராட்சி சார்பில் உடனடியாக பொக்லைன் உள்ளிட்டவை மூலம் சேறும், சகதியுமாக இருந்த மண்ணை அப்புறப்படுத்தி சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன.
Related Tags :
Next Story