‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகார் பெட்டி செய்தியால் நடவடிக்கை
சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சி குள்ளவீரன்பட்டி பகுதியில் குப்பைகள் சாலையில் ஓரத்தில் கொட்டப்பட்டு இருந்தது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கடந்த 20-ந் தேதி ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குவிந்து கிடந்த குப்பைகளை அள்ளினர். இதனால் அந்த பகுதி தற்போது சுத்தமாக காட்சி அளிக்கிறது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு உதவியாக செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
-ஊர்மக்கள், குள்ளவீரன்பட்டி, சேலம்.
===
பெயர் பலகையை மாற்றலாமே?
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் தடங்கம் ஊராட்சியில் பைபாஸ் ரோட்டில் கொத்தடிமை காலனி என்ற ஒரு பெயர் பலகை இருக்கிறது. இது மிகவும் வேதனை அளிக்கிறது. கொத்தடிமை முறையே இருக்கக்கூடாது என்று அரசு கூறிவரும் நிலையில் ஒரு காலனிக்கு கொத்தடிமை காலனி என்று பெயர் வைத்து, அந்தப்பகுதிக்கு செல்லும் சாலையில் ஒரு பெயர் பலகையும் வைத்துள்ளார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் இதுதொடர்பாக உடனே நடவடிக்கை எடுத்து கொத்தடிமை காலனி என்ற பெயரை மாற்றி ேவறு ஒரு பெயர் வைக்க வேண்டும்.
-ஜோதி, நல்லம்பள்ளி
=====
சாலையை ஆக்கிரமிக்கும் குப்பைகள்
தர்மபுரி மாவட்டம் குமாரசாமிப்பேட்டை மேல் தோப்பு தெரு வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அந்த வழியாக செல்கின்றனர். இந்த சாலையில் தினமும் குப்பைகள் ஆக்கிரமித்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த குப்பைகளில் இருக்கும் உணவுப் பொருட்களை சாப்பிடுவதற்காக ஏராளமான தெருநாய்கள் அந்த பகுதியில் முகாமிட்டு அந்த வழியாக செல்பவர்களை துரத்தி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த சாலையில் குப்பைகள் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கந்தன், குமாரசாமிப்பேட்டை, தர்மபுரி.
=====
பாதியில் நிற்கும் சாக்கடை கால்வாய் பணி
சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி 58-வது வார்டு காமராஜர் தெருவில் சாக்கடை கால்வாய் பணி தொடங்கப்பட்டு பாதியிலே நிற்கிறது. மழைக்காலம் என்பதால் அதிக மழை பெய்யும் போது தற்போதுள்ள பணி முழுமையும் சேதம் ஆகிவிடும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிறுத்தப்பட்ட சாக்கடை கால்வாய் உடனே பணியை தொடங்க வேண்டும்.
-மாணிக்கம், முணங்கரடு, சேலம்
.====
புதிய சாலை அமைக்கப்படுமா?
சேலம் மாவட்டம் ஓமலூரில் மேட்டூர் பாலத்தின் இறக்கத்தில் இருந்து மேச்சேரி பிரிவு வரை உள்ள சாலை இடது பக்கமாக ரோட்டின் மட்டத்தல் இருந்து உயரமாக தார் பிதுங்கி உள்ளது. இதனால் இரு சக்கர வாகனங்கள் எதிர்பாராதவிதமாக அதன்மீது ஏறி விழுந்து விபத்துகள் நிகழ்கிறது. பாலத்தின் இறக்கம் முதல் பிரிவு வரை பெயர்ந்துள்ள சாலையை பெயர்த்து விட்டு புதிய சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.குணசீலன், மேச்சேரி, சேலம்.
====
எரியாத உயர்கோபுர மின்விளக்கு
சேலம் மாவட்டம் மேச்சேரி பஸ் நிலைய பகுதியானது கடந்த ஒரு மாத காலமாக இருளில் மூழ்கி உள்ளது. அங்கு உள்ள உயர் கோபுர மின் விளக்கு சரிவர பராமரிப்பு இல்லாததாலும், தரமில்லாத மின்விளக்கு பயன்படுத்துவதாலும் அடிக்கடி பழுது ஏற்பட்டு தற்போது எரியாமல் உள்ளது. இதனால் மர்ம நபர்கள் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு தொல்லை கொடுக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து உயர்கோபுர மின்விளக்கை சரிசெய்ய வேண்டும்.
-துரை, மேச்சேரி, சேலம்.
சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா நங்கவள்ளி ஒன்றியம் கரிக்காப்பட்டி பஸ் நிலையம் அருகில் உயர்மின் விளக்கு இல்லை. இப்பகுதியில் இரவு நேரங்களில் மது அருந்தி விட்டு மர்ம நபர்கள் பாட்டில்களை சாலையில் உடைக்கின்றனர். இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் சில நேரங்களில் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் உயர் மின்விளக்கு அமைக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், கரிக்காப்பட்டி, சேலம்.
===
தண்ணீர் பிரச்சினை
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி மெயின் ரோடு ராமநாதபுரம் 8-வது வார்டில் சரியாக தண்ணீர் வருவது இல்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் தண்ணீரை தேடி பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. பல மாதங்களாக இதே நிலைதான் உள்ளது. இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் அலட்சியப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி அந்த பகுதியில் விரைவில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.
-ஊர்மக்கள், ராமநாதபுரம், சேலம்.
===
கழிப்பிடத்திற்கு கட்டாய வசூல்
சேலம் புதிய பஸ் நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் அமைந்துள்ள கட்டண கழிப்பிடத்தில் மாநகராட்சி நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகம் வசூல் செய்கின்றனர். மேலும் கட்டணம் விவரம் பேனர் வைக்க சேலம் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. ஆனால் கட்டண விவர பேனர் வைக்காமல் கழிப்பிடத்திற்கு வரும் பயணிகளிடம் வலுக்கட்டாயமாக அதிக கட்டண வசூல் செய்கின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமா? என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
-ப.செல்வகுமார், சேலம்.
===
சாக்கடை கால்வாய் வேண்டும்
சேலம் மாவட்டம் ஜாகீர்ரெட்டிபட்டி பைபாஸ் அருகில் உள்ள அம்பேத்கர்நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் நீண்ட நாள் கோரிக்கையான சாக்கடை கால்வாய் வேண்டி பலமுறை மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை சாக்கடை கால்வாய் அமைக்கப்படவில்லை. 3 பகுதிகளில் இருந்து அந்த வழியாகத்தான் சாக்கடை நீர் செல்கிறது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் வரை நோய் தொற்றால் அவதிப்படுகின்றனர். மேலும் விஷப்பூசிகளின் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. எனவே இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை காத்திட சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.
-ஊர்மக்கள், அம்பேத்கார் நகர், சேலம்.
===
Related Tags :
Next Story