ஆத்தூரில் தங்கும் விடுதியில் பெண் கொலை: ‘திருமணத்துக்கு வற்புறுத்தியதால் தீர்த்துக்கட்டினேன்’-கைதான என்ஜினீயர் பரபரப்பு வாக்குமூலம்


ஆத்தூரில் தங்கும் விடுதியில் பெண் கொலை: ‘திருமணத்துக்கு வற்புறுத்தியதால் தீர்த்துக்கட்டினேன்’-கைதான என்ஜினீயர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 21 Nov 2021 10:11 PM GMT (Updated: 21 Nov 2021 10:11 PM GMT)

திருமணத்துக்கு வற்புறுத்தியதால் தீர்த்துக்கட்டினேன் என்று தங்கும் விடுதியில் பெண் கொலையில் கைதான என்ஜினீயர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆத்தூர்:
திருமணத்துக்கு வற்புறுத்தியதால் தீர்த்துக்கட்டினேன் என்று தங்கும் விடுதியில் பெண் கொலையில் கைதான என்ஜினீயர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தங்கும் விடுதியில் பெண் கொலை
கடலூர் மாவட்டம் அடரி களத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த கருப்பையா என்பவரின் மனைவி எழிலரசி (வயது 42). இவர், கடந்த 17-ந் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை பகுதியில் தங்கும் விடுதி ஒன்றில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் கொலையாளி குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், எழிலரசி வீட்டுக்கு அருகில் வசிக்கும் 22 வயதான என்ஜினீயர் இளங்கோ என்பவர் எழிலரசியை கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.
வாலிபர் கைது
இளங்கோவை கைது செய்த பிறகு தான், எழிலரசி கொலை செய்யப்பட்டதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியும் என போலீசார் நினைத்தனர். அதற்காக இளங்கோவை தேடி வந்த தனிப்படை போலீசார் அவரை கைது செய்து ஆத்தூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.
அங்கு போலீசார் இளங்கோவிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் இளங்கோ, எழிலரசியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதுடன், அதற்கான காரணத்தையும் கூறினார். இதுதவிர பல்வேறு திடுக்கிடும் தகவல்களையும் இளங்கோ போலீசாரிடம் கூறினார். அதன் விவரம் வருமாறு:-
திடுக்கிடும் தகவல்கள்
எங்களது வீட்டின் பக்கத்து வீட்டில் எழிலரசி வசித்து வந்தார். அவருடைய கணவர் கருப்பையா வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். எழிலரசிக்கு 3 பிள்ளைகள் உண்டு. நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது எழிலரசி எனக்கு அறிமுகம் ஆனார். அவருக்கு சில உதவிகள் செய்து வந்தேன். இதனால் அடிக்கடி எழிலரசி வீட்டுக்கு சென்று வருவேன்.
எழிலரசியின் கணவர் வெளிநாட்டில் இருந்ததால் எங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. இந்த நெருக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் ரகசியமாக சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம்.
திருமணத்துக்கு வற்புறுத்தல்
இதற்கிடையே எழிலரசி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி என்னிடம் கேட்டார். அதற்கு நான், நமது இருவருக்கும் 20 வயது வித்தியாசம் உள்ளது. திருமணம் செய்து கொண்டால் சரிப்பட்டு வராது என்று கூறினேன். அவர் தொடர்ந்து திருமணத்துக்கு வற்புறுத்தவே, எழிலரசியை விட்டு விலக முடிவு செய்தேன். அதற்காக எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்துள்ளது. நான் வெளிநாடு செல்ல போகிறேன் என்றேன்.
அதற்கு எழிலரசி, நான் என்னுடைய கணவரை விட்டு உன்னுடன் வந்து விடுகிறேன். நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தொடர்ந்து என்னை கட்டாயப்படுத்தி வந்தார். இதனால் நான் நிம்மதியை இழந்து தவித்தேன்.
தீர்த்துக்கட்டினேன்
எனவே எழிலரசி உயிரோடு இருந்தால் நாம் நிம்மதியாக வாழ முடியாது என நினைத்தேன். எனவே எழிலரசியை அழைத்துக்கொண்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதிக்கு வந்தேன். அங்குள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினோம். அப்போதும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி எழிலரசி கூறினார். நான் முடியாது என்று கூறினேன். அதற்கு அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் நமது கள்ளக்காதலை ஊர் முழுக்க சொல்லி உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன் என்று கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நான், எழிலரசி சேலையால் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன். அந்த சேலையில் தூக்குப்போட்டு இறந்தது போல் வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றேன். ஆனால் போலீசார் என்னை ரகசியமாக கண்காணித்து கைதுசெய்து விட்டனர்.
இவ்வாறு போலீசில் இளங்கோ வாக்குமூலம் அளித்துள்ளார்.
42 வயது கள்ளக்காதலி திருமணத்துக்கு வற்புறுத்தியதால் 22 வயது வாலிபர் அவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story