தொடர் மழையால் வரத்து குறைந்தது தக்காளி விலை கிடுகிடு உயர்வு ஒரு கிலோ ரூ100க்கு விற்பனை
தொடர் மழையால் பாலக்கோடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ100க்கு விற்பனை செய்யப்பட்டது.
பாலக்கோடு:
தொடர் மழையால் பாலக்கோடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து, ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர் மழை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, பஞ்சப்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் தக்காளிகளை விவசாயிகள் பறித்து பாலக்கோடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருகிறார்கள்.
இந்த தக்காளியை வியாபாரிகள் வாங்கி சேலம், திருச்சி, கோவை, திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வருகின்றனர். பாலக்கோடு பகுதியில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் தோட்டங்களில் தண்ணீர் புகுந்து தக்காளி செடிகள் நீரில் முழ்கின. இதனால் தக்காளிகள் செடிகளிலேயே அழுகின.
விலை உயர்வு
இதன் காரணமாக பாலக்கோடு மார்க்ெகட்டுக்கு தக்காளி வரத்து பெருமளவில் குறைந்தது. இதனால் தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நேற்று பாலக்கோடு மார்க்கெட்டில் 15 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை ரகத்திற்கு ஏற்ப விற்பனையானது. சில்லரையாக ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. இதுகுறித்து வியாபாரிகள் கூறும் போது, ‘தொடர் மழையால் வயல்களில் தண்ணீர் புகுந்து தக்காளிகள் செடிகளிலேயே அழுகி வருகிறது. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. வரத்து குறைந்ததால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது. தக்காளி விலை மேலும் உயர வாய்ப்புள்ளது’ என்றார்கள்.
தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story