வளர்ச்சி திட்டப்பணிகளை அலுவலர்கள் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் எம்பி அறிவுறுத்தல்
மத்திய மாநில அரசுகளின் வளர்ச்சி திட்டப்பணிகளை தர்மபுரி மாவட்டத்தில் துறை அலுவலர்கள் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டத்தில் செந்தில்குமார் எம்பி அறிவுறுத்தினார்.
தர்மபுரி:
மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சி திட்டப்பணிகளை தர்மபுரி மாவட்டத்தில் துறை அலுவலர்கள் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டத்தில் செந்தில்குமார் எம்.பி. அறிவுறுத்தினார்.
கண்காணிப்புக்குழு கூட்டம்
தர்மபுரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் திவ்யதர்சினி முன்னிலை வகித்தார். மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் செந்தில்குமார் எம்.பி. தலைமை தாங்கி கூட்டத்தை தொடங்கி வைத்தார். கூட்டத்தில் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் செந்தில்குமார் எம்.பி. பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களுக்கு உரிய நிதியை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்து வருகின்றன. இந்த திட்டப்பணிகளை துறை அலுவலர்கள் அரசு விதிமுறைகளை பின்பற்றி முனைப்புடன் செயல்படுத்த வேண்டும். இதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால் கலெக்டர் மற்றும் என்னிடம் தெரிவித்தால் அதற்குரிய தீர்வை கண்டறிந்து திட்டங்களை காலதாமதமின்றி நிறைவேற்ற முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அலுவலர்கள் விளக்கம்
இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் பல்வேறு துறைகளில் மத்திய, மாநில அரசு நிதி மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விளக்கி பேசினார்கள்.
இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் வைத்திநாதன், தர்மபுரி உதவி கலெக்டர் சித்ராவிஜயன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் முத்துசாமி, வேளாண்மை இணை இயக்குனர் வசந்தரேகா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அசோகன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாசசேகர், தர்மபுரி நகராட்சி ஆணையர் சித்ரா சுகுமார் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story