பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த பொதுமக்கள் அவரை தடுத்து நிறுத்தினார்கள்.
பெண் தீக்குளிக்க முயற்சி
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்து. பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக அளித்தனர். அப்போது கலெக்டர் அலுவலக கூட்ட அரங்குக்கு முன்பு ஒரு பெண் திடீரென்று தான் கொண்டு வந்த பையில் இருந்த பாட்டிலை எடுத்து மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை அங்கிருந்த பொதுமக்கள் கவனித்து பாட்டிலை பிடுங்கியதுடன் அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர்.
வழக்கமாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கம் முன் 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆனால் நேற்று ஒரு போலீஸ்காரர் கூட இல்லை. அந்த பெண் தீக்குளிக்க முயன்ற நேரத்தில் பொதுமக்கள் தடுக்காவிட்டால் விபரீதம் நடந்திருக்கும். அருகில் உள்ள டீக்கடையில் இருந்து குடங்களில் தண்ணீர் எடுத்து வந்து அந்த பெண்ணின் உடலில் ஊற்றினார்கள்.
கடன் பிரச்சினை
பின்னர் சம்பவம் பற்றி அறிந்ததும் கலெக்டர் அலுவலக மேலாளர் ரமேஷ், வந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார். இதுகுறித்து அந்த பெண் கூறியதாவது
எனது பெயர் ராசாத்தி என்கிற ராஜாமணி வயது 43. எனது கணவர் நல்லதம்பி. நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். நான் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். எனக்கு பிளஸ்2 படிக்கும் மகன், பிளஸ்1 படிக்கும் மகள் உள்ளனர். அவினாசி அருகே பழங்கரை பெரியாயிபாளையத்தில் வசித்து வருகிறேன். குடும்ப தேவைக்காக எனது கணவர் ரூ.1 லட்சம் கடன் வாங்கினார். அதன்பிறகு அவர் வேலைக்கு சரிவர செல்லாமல் சொந்த ஊரான பழனிக்கு சென்று விட்டார். கடன்காரர்கள் என்னிடம் வந்து தொந்தரவு செய்கிறார்கள். எனது மகள், மகனை வைத்து குடும்பம் நடத்தவே மிகவும் சிரமப்பட்டு வருகிறேன்.
எனது தந்தைக்குரிய சொத்தில் இருந்து எனக்குரிய பாகத்தை கொடுக்காமல் இருக்கிறார்கள். கடன் பிரச்சினையில் மன உளைச்சலில் எனக்கு வேறு வழி தெரியவில்லை என்று கதறி அழுதபடி தெரிவித்தார். ராசாத்தியை சமூக நலத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று அங்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தால் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story