வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியாக செயல்படுகிறதா


வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியாக செயல்படுகிறதா
x
தினத்தந்தி 22 Nov 2021 7:33 PM IST (Updated: 22 Nov 2021 7:33 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியாக செயல்படுகிறதா? என்று மாதிரி தேர்தல் நடத்தி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

ஊட்டி

ஊட்டியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியாக செயல்படுகிறதா? என்று மாதிரி தேர்தல் நடத்தி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

என்ஜினீயர் குழு ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகள் உள்ளது. இங்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டு உள்ளது. 

ஊட்டியில் 1,249 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 2,201 வாக்குப்பதிவு எந்திரங்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 440 எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 13-ந் தேதி முதல் வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்களின் செயல்பாட்டு தன்மையை உறுதிப்படுத்த பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட் நிறுவன என்ஜினீயர் குழு ஆய்வு செய்து சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டது. 

மாதிரி தேர்தல்

தொடர்ந்து எந்திரங்களில் பழுது உள்ளதா, தடை இல்லாமல் இயங்குகிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பணி முடிவடைந்து, பழுதடைந்த எந்திரங்கள் தனியாக வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று ஊட்டி கேரளா கிளப்பில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாதிரி தேர்தல் நடைபெற்றது. 

இதற்காக இருபுறமும் வரிசையாக மேஜைகள் போடப்பட்டு, வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்கள் வைக்கப்பட்டது. மாதிரி தேர்தலுக்காக 30 வாக்குப்பதிவு எந்திரங்கள், 30 கட்டுப்பாட்டு எந்திரங்களில் தலா 1000 வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம் எந்திரத்தில் பொருத்தப்பட்டு உள்ள ஒவ்வொரு பட்டனும் சரியாக செயல்படுகிறதா, பேட்டரி உறுதி தன்மை மற்றும் பழுது இல்லாமல் இயங்குகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது. 

25-ந் தேதி வாக்காளர் பட்டியல்

மாதிரி தேர்தலை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) சீனிவாசன் பார்வையிட்டார். மேலும் மாதிரி வாக்குப்பதிவின் போது எந்திரங்களில் ஒலி வருகிறதா, சின்னத்துக்கு நேரே வாக்கு பதிவாகிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறும்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தலுக்கு எந்திரங்களில் பயன்படுத்தப்படும் காகிதம் கொண்டு வந்து பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. என்ஜினீயர்கள் குழு, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் மூலம் மாதிரி தேர்தல் நடத்தப்பட்டது. வருகிற 25-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது என்றார்.


Next Story