தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
குப்பைகளால் துர்நாற்றம்
நிலக்கோட்டை 8-வது வார்டு காமராஜ்நகர் தெருவின் நுழைவுவாயிலில் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அந்த வழியாக மக்கள் செல்ல முடியாத வகையில் துர்நாற்றம் வீசுகிறது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சத்யா, நிலக்கோட்டை.
சேதமடைந்த சாக்கடை கால்வாய்
கம்பம் நகராட்சி 9-வது வார்டு தாத்தப்பன்குளம் 13-வது தெருவில் சாக்கடை கால்வாய் சேதம் அடைந்து விட்டது. இதனால் கழிவுநீர், மழைநீர் முறையாக வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே, சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும்.
-கார்த்திக், கம்பம்.
அடிப்படை வசதிகள் தேவை
ஆத்தூர் தாலுகா வக்கம்பட்டி அன்னைநகரில் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் மழை பெய்தால் தெருக்கள் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இரவு நேரத்தில் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கி விடுகிறது. பொதுமக்களின் நலன்கருதி அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்.
-ஸ்டீபன் சாமுவேல், வக்கம்பட்டி.
விபத்தை தடுக்க வேகத்தடை வேண்டும்
பெரியகுளம் தென்கரை மூன்றாந்தல் பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இதை தடுக்க தேவர்சிலை முதல் வைகை அணை சாலை வரை முக்கிய இடங்களில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-யுவராஜ் ராமகிருஷ்ணன், பெரியகுளம்.
தலைகீழாக தொங்கும் கேமரா
தேனி புதிய பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் ஒரு கேமரா தலைகீழாக தொங்கியபடி உள்ளது. மேலும் கேமராக்கள் செயல்படுகிறதா? என்ற சந்தேகம் எழுகிறது. எனவே பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு கேமராக்களை முறையாக பராமரித்து பயன்பாட்டில் வைக்க வேண்டும்.
-திருக்குமரன், தேனி.
கண் கூசும் விளக்குகளால் விபத்து
திண்டுக்கல்லில் பல இருசக்கர வாகனங்களில் கண் கூசும் விளக்கு பொருத்தப்பட்டு இருக்கிறது. இதனால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதோடு, விபத்தில் சிக்கி கொள்கின்றனர். அதேபோல் பக்கவாட்டு கண்ணாடி இல்லாமல் பலர் வாகனம் ஓட்டுகின்றனர். அதுவும் விபத்துக்கு வழிவகுத்து விடுகிறது. இதை தவிர்க்க போலீசார், போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜாகீர்உசேன், திண்டுக்கல்.
ஆபத்தான சாலை பள்ளம்
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் மூலக்கடையை அடுத்த மந்திச்சுனையில் சாக்கடை பாலம் சேதமடைந்து பள்ளம் உருவாகிவிட்டது. அந்த வழியாக இரவில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர். இதனால் மரக்கட்டைகளால் பள்ளத்தை மறைத்து வைத்து இருக்கின்றனர். இந்த பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்.
-சூரியபிரகாஷ், மந்திச்சுனை.
வீடுகளுக்கு மேல் மின்வயர்
வேடசந்தூர் தாலுகா குளத்தூர் அருகே உள்ள எரமநாயக்கன்பட்டியில் வீடுகளின் மேற்கூரையை உரசுவது போன்று மின்வயர்கள் செல்கின்றன. மழை காலமாக இருப்பதால் மக்கள் அச்சத்துடன் வசிக்க வேண்டியது உள்ளது. எனவே மின்வயர்களை மாற்றி அமைக்க வேண்டும்.
-சண்முகம், எரமநாயக்கன்பட்டி.
Related Tags :
Next Story