தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 22 Nov 2021 8:23 PM IST (Updated: 22 Nov 2021 8:23 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான சாலை

நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் அருகில் கைலாசபுரம் செல்லும் இணைப்பு சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. நகரின் மையப்பகுதியாக விளங்கும் இந்த வழியாகத்தான் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் ஆஸ்பத்திரிகள், கோவில்கள், பள்ளிக்கூடங்கள், வணிக நிறுவனங்களுக்கு ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். பழுதடைந்த சாலையை உடனே சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-மைதீன், கைலாசபுரம்.

குளக்கரையில் தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

களக்காடு சிங்கம்பத்து மெயின் ரோட்டில் இருந்து ஊருக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதன் அருகில் உள்ள குளமும் தடுப்புச்சுவரின்றி அபாயகரமாக அமைந்துள்ளது. எனவே, சாலையை சீரமைத்து, குளக்கரையில் தடுப்புச்சுவர் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-அபுபக்கர், சிங்கம்பத்து.

சாலையை ஆக்கிரமித்த செடிகள் 

சேரன்மாதேவி யூனியன் கங்கனாங்குளம் பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து கால்வாய் தென்பகுதி வழியாக பிள்ளைகுளம், அந்தோணிநகர் செல்லும் சாலை முழுவதும் ஜல்லி கற்கள் பெயர்ந்து மண் சாலையாக மாறி விட்டது. மேலும், சாலையின் இருபுறங்களிலும் செடிகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-வேலவன், கங்கனாங்குளம்.

பஸ் வசதி தேவை

வீரவநல்லூர் அருகே உள்ள அத்தாளநல்லூர் கிராமத்துக்கு செல்ல  போதிய அரசு பஸ் வசதி இல்லை. இதனால் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். அங்கு போதிய பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிேறன்.
-சரவணன், அத்தாளநல்லூர்.

தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி 

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் பூலாங்குளம் பஞ்சாயத்து நடுபூலாங்குளம் தெருவில் மழைநீர் குளம் போன்று தேங்குகிறது. அங்கு பெரும்பாலான இடங்களில் சேறும் சேகதியுமாக காட்சி அளிப்பதால், அங்குள்ள வீடுகளுக்கு செல்ல முடியாமல் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. தேங்கிய மழைநீரை வடிய வைக்க  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 
-தங்கசாமி, பூலாங்குளம்.

சுகாதாரக்கேடு

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் புதுக்குளம் கரையில் சிலர் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் அங்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. அப்பகுதியில் போதிய குப்பைத்தொட்டிகளை வைத்து, குப்பைகளை தினமும் அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
-சுவாமிநாதன், கிருஷ்ணாபுரம்.

உடைந்த தடுப்புச்சுவர் 

பாவூர்சத்திரம் அருகே மேலப்பாவூர் வாய்க்கால் வழியாக தண்ணீர் செல்கிறது. இதன்மூலம் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த நிலையில் மேலப்பாவூர் வாய்க்கால் பாலம் அருகில் உள்ள தடுப்புச்சுவரில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மண்மூட்டைகளை அமைத்து தற்காலிகமாக சீரமைத்துள்ளனர். வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக செல்வதால், மீண்டும் உடைப்பு ஏற்பட்டால் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. 
-மருது பாண்டியன், மேலப்பாவூர்.

போக்குவரத்துக்கு இடையூறான மாடுகள்

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் மெயின் பஜாரில் ஏராளமான மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் அடிக்கடி வாகன விபத்துகளும் நிகழ்கின்றன. சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-துரைமுருகன், முக்காணி.

பழுதடைந்த பாலம் சீரமைக்கப்படுமா? 

தூத்துக்குடி தெர்மல் நகருக்கு செல்லும் வழியில் உள்ள மச்சாது ஆற்றுப்பாலம் பழுதடைந்த நிலையில் உள்ளது. பழமைவாய்ந்த இந்த பாலத்தின் ஒருபக்க தடுப்பு சுவர் உடைந்து விழுந்து விட்டது. இதன் வழியாக உப்பளங்களுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே, பழுதடைந்த பாலத்தை சீரமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
-முருகேசன், தூத்துக்குடி.


Next Story