தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 22 Nov 2021 9:47 PM IST (Updated: 22 Nov 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

நாகை, திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

பழைய மின்கம்பம் அகற்றப்பட்டது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மும்மூர்த்தி விநாயகர் கோவில் தெருவில் ஒரு மின்கம்பம் ஆபத்தான நிலையில் இருந்தது. இதன் அருகே புதிய மின்கம்பம் அமைக்கப்பட்ட பின்பும், ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பம் அகற்றப்படாமல் இருந்தது. இதனால் மின்கம்பம் இருந்த பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வந்தனர். இதுகுறித்து "தினத்தந்தி" புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்த பழைய மின்கம்பம் அகற்றப்பட்டது. எனவே, செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
-பொதுமக்கள், மன்னார்குடி.
சேறும், சகதியுமான பள்ளிவளாகம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் கொழையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயில்கின்றனர். இந்த பள்ளியின் முன் பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கின்றன. தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மாணவ-மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், மழைநீர் வடிந்தாலும் அந்த பகுதி சேறும், சகதியாக மாறிவிடுகிறது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளியின் முன்பு மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
-ரவீந்தர், மயிலாடுதுறை.
இரும்பு கம்பிகள் சீரமைக்கப்படுமா?
மயிலாடுதுறை மாவட்டத்தையும், கடலூர் மாவட்டத்தையும் இணைக்கும் கொள்ளிடம் ஆற்றுப்பாலம் உள்ளது. இந்த ஆற்றுப்பாலத்தில் உள்ள சாலையில் ஆங்காங்கே இரும்பு கம்பிகளால் இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இரும்பு கம்பிகள் சேதமடைந்து சாலையின் நடுவே மேல்நோக்கி நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி  கொள்கின்றனர். எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு ஆபத்தான நிலையில் உள்ள இரும்பு கம்பிகளை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-பிரபு, கொள்ளிடம்.
மழைநீர் வடிகால் வசதி வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த சின்னபள்ளிவாசல் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளை சூழ்ந்து குளம் போல் காட்சி அளிக்கிறது. தேங்கி கிடக்கும் மழைநீரில் இருந்து விஷப்பூச்சிகள் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் பெண்கள், குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மழைநீர் வடிகால் வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், மயிலாடுதுறை.

Next Story