நெல்மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்தன


நெல்மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்தன
x
தினத்தந்தி 22 Nov 2021 9:55 PM IST (Updated: 22 Nov 2021 9:55 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்:
திருவாரூரில் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
நெல் கொள்முதல் நிலையங்கள்
திருவாரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 800 எக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றது. அறுவடை பணிகள் தொடங்கிய நிலையில் மாவட்டம் முழுவதும் 265 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. தொடர்ந்து பெய்த  கனமழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதடைந்துள்ளன.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் உரிய நேரத்தில் நகர்வு செய்யப்படாமல் இருப்பு வைக்கப்பட்டதால் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைக்க தொடங்கியது. 
திறந்தவெளி சேமிப்பு கிடங்கு 
திருவாரூர் கிடாரங்கொண்டான் பகுதியில் திறந்தவெளி சேமிப்பு கிடங்கு அமைந்துள்ளது. இங்கு  20 ஆயிரம் டன் நெல் இருப்பு வைக்கப்பட்டு பொது வினியோக திட்டத்தில் அரிசியாக வழங்கப்படுவதற்காக அரவை மில்லிற்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பி வைக்கப்படும். இதில் உரிய நேரத்தில் திறந்த வெளி சேமிப்பு கிடங்கில் இருந்து நெல் மூட்டைகள் நகர்வு செய்யப்படாமல் உள்ளது. தார்ப்பாய் கொண்டு மூடப்பட்ட போதிலும் ஆயிரகணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து வருகிறது. மேலும் நனைந்த நெல்மணிகள் முளைக்க தொடங்கியது.
நிரந்தர கட்டிட வசதி 
இதனால் அரசுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது 12 ஆயிரம் டன் நெல் இருப்பில் உள்ள நிலையில் மழை தொடரும் நிலையில் நெல் மூட்டைகளை உடனடியாக பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாரூர் கிடாரங்கொண்டான் திறந்த வெளி சேமிப்பு கிடங்கு பிரதான கிடங்காக உள்ளதால் நிரந்த கட்டிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story