திருவெண்ணெய்நல்லூர் அருகே மினி லாரி கவிழ்ந்து பெண் உள்பட 3 பேர் பலி துக்கம் விசாரிக்க சென்றபோது பரிதாபம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே துக்கம் விசாரிக்க சென்றபோது மினி லாரி கவிழ்ந்த விபத்தில் பெண் உள்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
அரசூர்
சாலையில் கவிழ்ந்தது
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மேட்டுகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன்(வயது 60). கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வீரப்பெருமாநல்லூர் கிராமத்தை சேர்ந்த தனது உறவினர் ஒருவர் இறந்த துக்கம் விசாரிப்பதற்காக ரங்கநாதனும், அவரது உறவினர்களும் மேட்டுக்குப்பத்தில் இருந்து மினி லாரியில் வீரப்பெருமாநல்லூர்நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அதே கிராமத்தை சேர்ந்த ஏழுமலை(45) என்பவர் மினி லாரியை ஓட்டினார்.
திருக்கோவிலூர்- பண்ருட்டி சாலையில் உள்ள பெரியசெவலை அரிசி ஆலை அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார். இதில் நிலை தடுமாறி மினி லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
2 பேர் பலி
இதில் படுகாயம் அடைந்த மினி லாரியில் வந்த அண்ணாமலை மனைவி தேன்மொழி(50), சேட்டு என்கிற சேகர்(46) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் லட்சுமணன்(45), சேகர் மனைவி பத்மாவதி(40), விஜி(42), சரோஜா(40), ராமசாமி(54), திருவேங்கடம் மனைவி அகிலா(55), மணிகண்டன்(45), ரங்கநாதன் (60), பாவாடை(55), பாண்டுரங்கன்(80), ரங்கநாதன் மனைவி சின்னப்பொண்ணு (60), வேலாயுதம் மனைவி விஜயா(45) உள்பட 24 பேர் படுகாயம் அடைந்து வலி தாங்க முடியாமல் கூச்சல் எழுப்பினர்.
போலீசார் விரைந்தனர்
இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலைய பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி லட்சுமணன் பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்தில் பலியான தேன்மொழி, சேட்டு, லட்சுமணன் ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். துக்கம் விசாரிக்க சென்றபோது மினி லாரி கவிழ்ந்து 3 பேர் பலியான சம்பவத்தால் மேட்டுக்குப்பம் கிராம மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
Related Tags :
Next Story