ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 11 நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீர்


ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 11 நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீர்
x
தினத்தந்தி 22 Nov 2021 11:26 PM IST (Updated: 22 Nov 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் கோட்டை அகழியில் தண்ணீர் மட்டம் உயர்ந்ததால் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 11 நாட்களாக மழைநீர் தேங்கி நிற்கிறது.

வேலூர்

வேலூர் கோட்டை அகழியில் தண்ணீர் மட்டம் உயர்ந்ததால் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 11 நாட்களாக மழைநீர் தேங்கி நிற்கிறது.

வேலூர் கோட்டை

வேலூர் மாநகரின் மையப்பகுதியில் வேலூர் கோட்டை அழகிய அகழியுடன் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இந்த கோட்டை அகழியில் கோடை காலங்களில் குறைந்த அளவே தண்ணீர் காணப்படும். ஆனால் தற்போது வேலூரில் தொடர் மழை பெய்து வருவதால் கோட்டை அகழியில் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது.
அகழியில் தண்ணீர் உயர்ந்ததால் கடந்த 12-ந் தேதி கோட்டையில் உள்ளே அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் குளத்திலும், அங்குள்ள கிணற்றிலும் நீர்மட்டம் உயர்ந்தது. அதேவேளையில் கோவிலின் நுழைவு வாயில் பகுதியில் (குளம் அமைந்துள்ள இடம்) மழைநீர் தேங்கியது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மழைநீரில் நடந்து கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர்.

மழைநீர் தேக்கம்

இதையடுத்து தொடர்ந்து மழை பெய்ததால் கோட்டை அகழியில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்தது. எனவே கோவிலுக்குள்ளே குளம் மற்றும் கிணற்றில் நீர் மட்டம் உயர்ந்து, அதன் காரணமாக கோவில் உட்பிரகாரம், அம்மன் சன்னதி பகுதி வரை மழைநீர் அதிகமாக தேங்கியது.

தொடர்ந்து நேற்று வரை 11 நாட்கள் ஆகியும் மழைநீர் வடியாமல் தேங்கி நின்றது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் மழைநீரில் சிரமப்பட்டு செல்கின்றனர். மேலும் பலர் தங்களது செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். குழந்தைகள் தண்ணீரில் விளையாடினர். மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் நிர்வாகிகள் கூறுகையில், அகழியில் நீர்மட்டம் குறைந்தால் மட்டுமே கோவிலுக்குள் நீர்தேங்காது. எனவே கோட்டை அகழியில் நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story