பள்ளி மாணவியை சில்மிஷம் செய்த வழக்கில் ஆசிரியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை உடந்தையாக இருந்த மற்றொரு ஆசிரியருக்கும் சிறை
பள்ளி மாணவியை சில்மிஷம் செய்த வழக்கில் ஆசிரியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த மற்றொரு ஆசிரியருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது
விழுப்புரம்
பள்ளி மாணவியிடம் சில்மிஷம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அருகே உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 13 வயதுடைய மாணவி கடந்த 2018-ம் ஆண்டு 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
அப்போது அந்த பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்த நிர்மல்பிரேம் குமார்(வயது 43) என்பவர் வகுப்பறையில் சக மாணவாக்ள் முன்னிலையில் மாணவியை கையை பிடித்து சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சமூக அறிவியல் ஆசிரியர் லாரன்ஸ்(31) அந்த மாணவியை அழைத்து இதுபற்றி வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாக தெரிகிறது.
2 ஆசிரியர்களுக்கு சிறை
ஆனால் மாணவி, அழுதுகொண்டே வந்து தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுகுறித்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நிர்மல்பிரேம்குமார், லாரன்ஸ் ஆகிய இருவரையும் கைது செய்து விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி முத்துக்குமாரவேல், குற்றம் சாட்டப்பட்ட நிர்மல்பிரேம்குமாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், லாரன்சுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 4 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலா ஆஜரானார்.
Related Tags :
Next Story