அவதூறாக பேசியதால் தூய்மை பணியாளர் தற்கொலை


அவதூறாக பேசியதால் தூய்மை பணியாளர் தற்கொலை
x
தினத்தந்தி 22 Nov 2021 7:21 PM GMT (Updated: 22 Nov 2021 7:21 PM GMT)

ராஜபாளையம் அருகே அவதூறாக பேசியதால் தூய்மை பணியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக பஞ்சாயத்து தலைவி உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தளவாய்புரம், 
ராஜபாளையம் அருகே அவதூறாக பேசியதால் தூய்மை பணியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக பஞ்சாயத்து தலைவி உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 
தூய்மை பணியாளர் 
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த தளவாய்புரம் அருகே உள்ள மீனாட்சிபுரம் அருந்ததியர் காலனி தெருவைச் சேர்ந்தவர், நீலகண்டன் (வயது 53). இவருடைய மனைவி பாப்பா (48). இவர்கள் இருவரும் அருள் புத்தூர் பஞ்சாயத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தனர். 
சில நாட்களுக்கு முன்பு நீலகண்டன், பஞ்சாயத்தில் தங்களுக்கு தரவேண்டிய சம்பள உயர்வு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கேட்டுள்ளார். 
இதற்கு பஞ்சாயத்து தலைவி வள்ளியம்மாள் (55), பஞ்சாயத்து செயலாளர் மின்னல் ஜோதி (40), சிவலிங்கபுரம் பஞ்சாயத்து செயலாளர் கடற்கரை (45) ஆகிய 3 பேரும் அவரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. 
இதனால் நீலகண்டன் மனவருத்தம் அடைந்ததாக தெரிகிறது. 
இந்தநிலையில் அவர், அருள் புத்தூர் சுடுகாடு அருகே மதுவுடன் விஷத்தை கலந்து குடித்து மயங்கி கிடந்தார். 
3 பேருக்கு வலைவீச்சு 
இதனை அறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு தளவாய்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே நீலகண்டன் பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. 
இதுபற்றி தளவாய்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடல் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து பஞ்சாயத்து தலைவி வள்ளியம்மாள் உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story