மேலப்பாளையத்தில் கடைகள் அடைப்பு; ஆர்ப்பாட்டமும் நடந்ததால் பரபரப்பு
வார்டு மறுவரையறையை கண்டித்து மேலப்பாளையத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. இதையொட்டி ஆர்ப்பாட்டமும் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை:
மேலப்பாளையத்தில் புதிய வார்டு மறுவரையறையை கண்டித்து அனைத்து கடைகள் அடைக்கப்பட்டன. இதையொட்டி மாலையில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மாநகராட்சிகளில் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை மாநகராட்சியில் மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மறுவரையறையை ரத்து செய்ய வேண்டுமென்று மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதாவது இந்த பகுதியில் முன்புபோல் ஊருக்குள் 10 வார்டுகளும், மண்டலத்தில் 14 வார்டுகளும் அமைக்கும் வகையில் வார்டு மறுவரையறை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
கடைகள் அடைப்பு
இந்த நிலையில் வார்டு மறுவரையறையை ரத்து செய்ய தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி மேலப்பாளையத்தில் நேற்று காலையில் கடை அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் அங்கு நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் ஆட்டோக்கள் ஓடாததால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மேலப்பாளையம் பஜார்திடல், சந்தை முக்கு உள்ளிட்ட முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த கடை அடைப்பு போராட்டத்தில் அனைத்து வணிகர்கள், அனைத்து அரசியல் கட்சிகள், ஜமாத் உள்ளிட்ட அனைத்து பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
இந்த பகுதியில் போலீசார் ரோந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் மாலையில், கோரிக்கையை வலியுறுத்தி சந்தை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பகுதி தலைவர் முகைதீன் அப்துல் காதர் தலைமை தாங்கினார். நுகர்வோர் கண்காணிப்பகம் செயலர் அப்துல் முத்தலிப், மேலப்பாளையம் சாசோ செயலர் குதுபுன் நஜீப், மேலப்பாளையம் அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் தலைவர் பரக்கத்துல்லா, மேலப்பாளையம் வணிகர்கள் கூட்டமைப்பு பொருளாளர் அயூப்கான் ஆகியோர் முன்னிலை வதித்தனர்.
மாவட்ட தலைவர்கள் மீரான் மைதீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), ரசூல் மைதீன் (மனிதநேய மக்கள் கட்சி), சாகுல் அமீது உஸ்மானி (எஸ்.டி.பி.ஐ.), மாவட்ட செயலாளர்கள் பாஸ்கரன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), நிஜாம் (ம.தி.மு.க.), கரிசல் சுரேஷ் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அப்துல் காதர், அ.தி.மு.க. பகுதி செயலாளர் ஹயாத், ஜமாத்துல் உலமா மாவட்ட செயலர் ஜலீல் அகமது உஸ்மானி, அனைத்து சுன்னத் வல் ஜமாத் பள்ளிவாசல்களின் கூட்டமைப்பின் தலைவர் அமானுல்லா உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story