சாலைகளை சீரமைக்க கோரி நூதன போராட்டம்


சாலைகளை சீரமைக்க கோரி நூதன போராட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2021 1:12 AM IST (Updated: 23 Nov 2021 1:12 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரி, மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு சகதியில் குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை:
நெல்லையில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரி, மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு சகதியில் குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சகதியில் குளித்து நூதன போராட்டம்

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விஷ்ணு தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.
மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பாட்டிலில் எடுத்து வந்த சகதியை தங்களது உடலில் ஊற்றி குளித்து குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழுதடைந்த சாலைகள்

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில், நெல்லை மாநகர பகுதியில் தச்சநல்லூர், ராமையன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் பழுதடைந்து சேறும் சகதியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதேபோல் மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் சாலைகள் மோசமாக உள்ளது. இதுகுறித்து பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

தேர்தல் புறக்கணிப்பு

பாளையங்கோட்டை அருகே பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த திருஞானசம்பந்த நாயனார் தெரு, பார்வதி அம்மன் கோவில் தெரு, கோட்டூர் ரோடு, சேரமான் பெருமாள் நாயனார் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் காங்கிரஸ் மண்டல தலைவர் மாரியப்பன் மற்றும் சங்கர், சண்முகம், ஆறுமுகம், மந்திரம், மோகன் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தங்கள் பகுதியில் வார்டு மறுவரையறை செய்ததில் உள்ள குழப்பத்தை நீக்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், நெல்லை மாநகராட்சி 10-வது வார்டில் எங்கள் பகுதி சேர்க்கப்பட்டிருந்தது. தற்போது எங்கள் பகுதி வார்டு எண் 4-ல் சேர்க்கப்பட்டுள்ளது. மீண்டும் எங்கள் பகுதியை வார்டு 10-ல் சேர்க்க வேண்டும் இல்லையெனில் வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலைப் புறக்கணிப்போம் என்று கூறியுள்ளனர்.

போக்குவரத்து நெருக்கடி

பாளையங்கோட்டை புதிய பஸ் நிலையம் செல்லக்கூடிய புறநகர் மற்றும் டவுன் பஸ்கள் புறவழிச்சாலை வழியாக செல்லாமல் பாளையங்கோட்டை சிறைச்சாலை, குலவணிகர்புரம் சாலை வழியாகச் செல்வதால் அடிக்கடி விபத்து மற்றும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே மீண்டும் அந்த பஸ்களை புறவழிச்சாலை வழியாக இயக்க வேண்டும் என்று திராவிடர் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் திருக்குமரன் மனு கொடுத்துள்ளார்.
தமிழ்தேசிய மக்கள் விடுதலைக் கழகத்தினர் மாவட்ட செயலாளர் பாலாஜி தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து போலீசார் பொய் வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தி, மனு வழங்கினர்.

தையல் எந்திரங்கள்

மானூர் பெரியகுளத்தில் 5 ஆண்டுகளுக்கு மீன் குத்தகை விட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று மதவகுறிச்சி, கரம்பை பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
கோபாலசமுத்திரம் வடக்கூர் பொதுமக்கள் பஸ் வசதி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கலிதீர்த்தான்பட்டி கிராம மக்கள் தங்களது ஊருக்கு தினமும் சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்று மனு வழங்கினர்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்துக்கே சென்ற மாவட்ட கலெக்டர் விஷ்ணு மனுக்களை பெற்று கொண்டார். பின்னர் 17 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களை வழங்கினார்.


Next Story