மத்திய அரசு தமிழகத்திற்கு பாரபட்சம் இல்லாமல் நிவாரணம் வழங்க வேண்டும்


மத்திய அரசு தமிழகத்திற்கு பாரபட்சம் இல்லாமல்  நிவாரணம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 22 Nov 2021 7:45 PM GMT (Updated: 22 Nov 2021 7:45 PM GMT)

மத்திய அரசு தமிழகத்திற்கு பாரபட்சம் இல்லாமல் மழை பாதிப்பு நிவாரணம் வழங்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.

விருதுநகர், 
மத்திய அரசு தமிழகத்திற்கு பாரபட்சம் இல்லாமல் மழை பாதிப்பு நிவாரணம் வழங்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார். 
நடைபயணம் 
விருதுநகரில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- 
தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. அந்தவகையில் இங்கு  நடை பயணம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இந்த நடை பயணம் நடந்தது. 
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடத்தியது நகைப்புக்குரிய செயலாகும். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ரூ.9ஆக இருந்த பெட்ரோலுக்கான வரி தற்போது ரூ.32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விலை குறைக்க நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசை கண்டித்து அவர்கள் போராட்டம் நடத்துவது நகைப்புக்குரிய செயலாகும். 
நிவாரண உதவி 
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழக மக்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தால் பிரதமர் மோடியிடம் இதுபற்றி வலியுறுத்தி கூற வேண்டும். 
எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணி எப்போது முடியும் என்றும் உறுதியாக சொல்ல வாய்ப்பில்லாத நிலையில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு மத்திய, மாநில அரசு முடிவெடுக்க வேண்டும். இந்தநிலையில் இதற்கான தேதி நவம்பர் 15-ல் முடிவடைந்துவிட்ட நிலையில் நடப்பாண்டில் மாணவர் சேர்க்கைக்கு சாத்தியமில்லை என்றே கருதுகிறேன்.
 எய்ம்ஸ் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம். பள்ளி அளவில் மாணவிகளின் குறைகளை கேட்டறிய ஒரு உளவியல் ரீதியான அமைப்பை ஏற்படுத்த வேண்டும். மேலும் குடும்பத்திலும் பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் பள்ளியில் நடைபெறும் அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு காண வேண்டும். 
 கோவையில் நடந்த முதல்-அமைச்சரின் நிகழ்ச்சியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மேடையில் அமர்ந்்திருந்தது முதல்-அமைச்சரின் அரசியல் நாகரிகத்தை காட்டுகிறது. இது வரவேற்கத்தக்கது.  மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வரவில்லை. இது வருத்தத்தை அளிக்கிறது. மழை பாதிப்புகளை பார்வையிடும் மத்திய குழுவினரும் தமிழகத்திற்கு தேவையான நிவாரண உதவி வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். மத்திய அரசு பாரபட்சம் இல்லாமல் தமிழக அரசுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார். 
விலைவாசி உயர்வு 
விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள காமராஜர் சிலை முன்பு இருந்து விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் நடை பயணம் தொடங்கியது. இதில்  மாணிக்கம் தாகூர் எம்.பி.,  அசோகன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீ ராஜா சொக்கர், கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சிசுந்தரம், முன்னாள் நகரசபை துணைத் தலைவர் பால கிருஷ்ணசாமி, சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநிலச்செயலாளர் மகேந்திரன், காங்கிரஸ் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

Next Story