இறந்தவரது உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு


இறந்தவரது உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Nov 2021 1:33 AM IST (Updated: 23 Nov 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

இறந்தவரது உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு

வாழப்பாடி, நவ.23-
மயானத்துக்கு பாதை வசதி கேட்டு இறந்தவரது உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தாசில்தார் வரதராஜன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
இறந்தவர் உடலை வைத்து போராட்டம்
சேலம் மாவட்டம் வாழப்பாடி முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர் மக்களுக்கு மயானத்துக்கு செல்வதற்கு பாதை வசதி இல்லை. பாதை வசதி கேட்டு அந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்து விட்டார். அவரது உடலை அடக்கம் செய்ய ஆற்றை கடந்துதான் செல்ல வேண்டிய நிலை இருந்தது. எனவே மயானத்துக்கு பாதை வசதி அமைத்து தரக்கோரி சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இறந்தவரது உடலை வைத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் சாலையில் அமர்ந்து ஒப்பாரி வைத்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
தாசில்தார் பேச்சுவார்த்தை 
தகவல் அறிந்த வாழப்பாடி தாசில்தார் வரதராஜன், இன்ஸ்பெக்டர் உமாசங்கர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போராட்டம்  செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆற்றை கடந்துதான் உடலை எடுத்து செல்ல வேண்டி உள்ளது. எனவே உடனே பாதை அமைத்து தர வேண்டும் என்று கூறினர்.
தாசில்தார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. உடனே ஆற்றின் கரையோரம் பாதை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். முத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா செந்தில் தலைமையிலான குழுவினர் பொக்லைன் மூலம் ஆற்றங்கரையில் உள்ள முட்புதர்களை அகற்றி மயானத்திற்கு பாதை வசதி செய்து கொடுத்தனர்.
ஆற்றில் இறங்கி சென்றனர்
இதற்கிடையே இறந்தவரது உடலை அவரது உறவினர்கள் உடனே அடக்கம் செய்யவும் முடிவு செய்தனர். அதாவது ஆற்றில் இறங்கி இடுப்பளவு தண்ணீரில் நனைந்தபடி இறந்தவரது உடலை எடுத்து சென்று மயானத்தில் அடக்கம் செய்தனர்.
இந்த சம்பவத்தால் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பாகவும் இருந்தது.

Next Story