மைல்கல் மீது கார் மோதி கவிழ்ந்ததில் 2 அய்யப்ப பக்தர்கள் பலி


மைல்கல் மீது கார் மோதி கவிழ்ந்ததில் 2 அய்யப்ப பக்தர்கள் பலி
x
தினத்தந்தி 23 Nov 2021 2:41 AM IST (Updated: 23 Nov 2021 2:41 AM IST)
t-max-icont-min-icon

மைல்கல் மீது கார் மோதி கவிழ்ந்ததில் 2 அய்யப்ப பக்தர்கள் பரிதாபமாக இறந்தனர்.

மங்களமேடு:

அய்யப்ப பக்தர்கள்
செங்கல்பட்டு மாவட்டம் கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்த பாபுவின் மகன் ஆனந்த் (வயது 27). இவரும், கொளப்பாக்கத்தை சேர்ந்த ரமேஷ்(49), சரவம்பாக்கத்தை சேர்ந்த லட்சுமணன் (30), மதுராந்தகத்தை சேர்ந்த செல்வமணி (28), ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சூர்யா (40) உள்ளிட்ட 5 அய்யப்ப பக்தர்கள் கடந்த சனிக்கிழமையன்று ஒரு காரில் புறப்பட்டு சென்னையில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றனர்.
காரை செய்யூரை சேர்ந்த டிரைவர் கணேசன்(42) ஓட்டினார். பின்னர் அவர்கள் அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அயன்பேரையூர் பிரிவு சாலையில் அந்த கார் வந்தது.
2 பேர் பலி
அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மைல் கல்லின் மீது ேமாதி கவிழ்ந்தது. இதில் காரின் முன்பகுதி சேதமடைந்த நிலையில், காரில் இருந்த ஆனந்த், சூர்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கணேசன், லட்சுமணன், செல்வமணி, ரமேஷ் ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விபத்துக்கான காரணம்...
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த சனிக்கிழமை சென்னையில் இருந்து புறப்பட்ட அவர்கள் அய்யப்பன் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு முழுவதும் தூங்காமலும், போதிய ஓய்வு எடுக்காமலும் விடிய, விடிய காரை ஓட்டி வந்ததே விபத்திற்கு காரணம் என்று தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். 
மங்களமேடு அருகே மைல்கல் மீது கார் மோதி கவிழ்ந்ததில் அய்யப்ப பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story