டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் தந்தை-மகள் உள்பட 3 பேர் சாவு


டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் தந்தை-மகள் உள்பட 3 பேர் சாவு
x
தினத்தந்தி 23 Nov 2021 2:45 AM IST (Updated: 23 Nov 2021 2:45 AM IST)
t-max-icont-min-icon

கதக் அருகே, நின்ற டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் தந்தை-மகள் உள்பட 3 பேர் இறந்தனர். கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது இந்த பரிதாபம் நடந்து உள்ளது.

கதக்:

3 பேர் சாவு

  கதக் மாவட்டம் முண்டரகி அருகே மக்கா சோளத்தை ஏற்றிக்கொண்டு ஒரு டிராக்டர் சென்று கொண்டு இருந்தது. அப்போது டிராக்டரை சாலையோரம் நிறுத்திவிட்டு அதன் டிரைவர் டீ குடிக்க சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற டிராக்டரின் பின்பகுதியில் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்து குறித்து டிராக்டர் டிரைவர் உடனடியாக முண்டரகி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

  அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் காருக்குள் இருந்தவர்களை மீட்க முயன்றனர். அப்போது காரின் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தது தெரிந்தது. ஒரு பெண் உயிருக்கு போராடினார். அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கோவிலுக்கு சென்று திரும்பிய போது.....

  பின்னர் விபத்தில் இறந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் உயிரிழந்தவர்கள் உப்பள்ளியை சேர்ந்த சிவானந்தய்யா ஹிரேமத்(வயது 45), அவரது தாய் அனுசுயா(70), சிவானந்தய்யாவின் மகள் மானஸ்வி(6) என்பது தெரியவந்தது. படுகாயம் அடைந்தது சிவானந்தய்யாவின் மனைவி கிரிஷா என்றும் தெரிந்தது.

  இவர்கள் 4 பேரும் முண்டரகி அருகே ஷிங்கடல்லூரு கிராமத்தில் உள்ள வீரபத்ரேஸ்வரா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு உப்பள்ளிக்கு சென்ற போது விபத்து நடந்ததும், அதில் 3 பேர் இறந்ததும் தெரிந்தது. இந்த விபத்து குறித்து முண்டரகி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இறந்த சம்பவம் கதக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story