பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
பெரம்பலூர்:
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கொண்டு வந்த விவசாயிகள், நிவாரண தொகை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்கள் கூறுகையில், தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயம், கரும்பு, நெல், மரவள்ளி கிழங்கு, மஞ்சள், உளுந்து, ஆமணக்கு ஆகிய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகி வருகிறது.
ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம்
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகையாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரத்தை அரசிடம் இருந்து பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இதையடுத்து அவர்களில் சிலர் கலெக்டரை சந்தித்து கோரிக்கை தொடர்பான மனுவை வழங்கினர்.
இதேபோல் பெரம்பலூர்- ஆலம்பாடி ரோடு சமத்துவபுரத்தை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த 2000-ம் ஆண்டு திறக்கப்பட்ட சமத்துவபுரத்தில் சுமார் 100 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டு, அந்த குடும்பத்தினருக்கு பட்டா வழங்கப்பட்டது.
பட்டா வழங்க வேண்டும்
தற்போது வீடுகளில் விரிசல் காணப்பட்டு, மழைக்காலங்களில் வீட்டில் தண்ணீர் கசிந்து வருகிறது. வீட்டை புதுப்பித்து கட்டுவதற்கு வங்கியில் கடன் உதவி பெறுவதற்கு, நத்தம் பட்டா வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இதையடுத்து அவர்களில் சிலர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், பயணிகளுக்கு இடையூறாக பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தனர்.
பாதையை திறக்க வேண்டும்
இதேபோல் பெரம்பலூர் தீரன் நகர் ஸ்ரீதிவ்ய மங்கள விநாயகர் குடியிருப்போர் நல சங்கத்தை சேர்ந்தவர்களும், நெடுவாசல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பெரம்பலூர் தீரன் நகர் பிரிவு சாலைக்கு செல்லும் பாதையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் நெடுஞ்சாலையில் பெரம்பலூரில் இருந்து நெடுவாசல் பிரிவு சாலைக்கு செல்லும் பாதையை திறக்கவும், அல்லது நெடுவாசல் பிரிவு சாலையில் இருந்து நெடுஞ்சாலை வழியாக நேராக கலெக்டர் அலுவலக சாலைக்கு செல்ல சாலை அமைத்து, அங்கு மின்வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்
ரெங்கநாதபுரத்தை சேர்ந்த விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ரெங்கநாதபுரம் கால்நடை மருத்துவமனையில் இருந்து ஏரிக்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பால வசதியுடன் தார் சாலை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
கவுள்பாளையம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் சார்பில் கொடுத்த மனுவில், கவுள்பாளையத்தில் 2 புதிய குடிநீர் கிணறு அமைக்குமாறும், 1-வது வார்டு பார்க்கவன் நகரில் வடிகால் வசதியுடன் சாலை அமைப்பதற்கும், ஆதிதிராவிடர் நலத்துறையினால் வழங்கப்பட்ட வீட்டு மனைகளில் வெளியேறும் கழிவுநீருக்கு வடிகால் வசதி ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் கூறப்பட்டிருந்தது.
284 மனுக்கள்
கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் ெதாடர்பாக மொத்தம் 284 மனுக்களை பெற்ற கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story