சுவர் இடிந்து பெண் உயிரிழப்பு
சுவர் இடிந்து பெண் உயிரிழந்தார்.
விக்கிரமங்கலம்:
சுவர் இடிந்து விழுந்தது
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள உல்லியக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி கண்மணி (வயது 45). இவர்களது மகன் கலைச்செல்வன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதிக்கு கமலேஷ் என்ற 9 மாத ஆண் குழந்தை உள்ளது. காமராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கண்மணி தனது மகன் கலைச்செல்வனுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் கண்மணி, தனது பேரக்குழந்தையான கமலேசை தூக்கிக்கொண்டு வீட்டு தோட்டத்தின் பின்புறம் கட்டியுள்ள ஆடுகளை பராமரிப்பதற்காக தனது வீட்டிற்கு அருகே உள்ள சந்து வழியாக சென்றுள்ளார். அப்போது பக்கத்தில் உள்ள நடராஜன் என்பவருக்கு சொந்தமான உபயோகமற்ற வீட்டின் மண்சுவர் இடிந்து கண்மணி, கமலேஷ் ஆகியோர் மீது விழுந்தது.
பெண் சாவு
இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கி, பலத்த காயங்களுடன் கிடந்த 2 பேரையும் மீட்டனர். மேலும் அவர்களை சிகிச்சைக்காக ஒரு காரில் அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கண்மணியை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினார்.
பின்னர் கமலேசை அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கமலேசை அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கமலேசுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்மணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர். சுவர் இடிந்து விழுந்ததில் பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story