வீடு புகுந்து பல்கலைக்கழக ஊழியர் வெட்டிக் கொலை
பெங்களூருவில் வீடு புகுந்து பல்கலைக்கழக ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவாகி விட்ட மகளின் நண்பர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூரு:
வீடு புகுந்து வெட்டிக் கொலை
பெங்களூரு எலகங்கா நியூடவுன் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அட்டூரில் வசித்து வந்தவர் தீபக்குமார் சிங் (வயது 43). இவரது சொந்த ஊர் பீகார் மாநிலம் ஆகும். பெங்களூரு ஜி.கே.வி.கே. வேளாண் பல்கலைக்கழகத்தில் ஊழியராக தீபக்குமார் சிங் வேலை பார்த்து வந்தார். தீபக்குமாருக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறாள். நேற்று முன்தினம் தீபக்குமாரின் மனைவி சொந்த ஊருக்கு சென்றிருந்தார்.
இதனால் தீபக்குமாரும், அவரது மகளும் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்கள். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு தீபக்குமார் வீட்டில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார். அப்போது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த மர்மநபர்கள் தீபக்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில், பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
மகளின் நண்பர்கள்
உடனே அங்கிருந்து மர்மநபர்கள் ஓடிவிட்டனர். இதுபற்றி அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் எலகங்கா நியூடவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் மற்றும் துணை போலீஸ் கமிஷனர் பாபா, தீபக்குமாரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது 4 மர்மநபர்கள் தீபக்குமாரை வீடு புகுந்து கொலை செய்தது தெரிந்தது. மேலும் தீபக்குமாரின் மகள், ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு தீபக் குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது காதலனிடம் இளம்ெபண் கூறியதாக தெரிகிறது.
இதனால் இளம்பெண்ணின் காதலன் மற்றும் அவரது நண்பர்கள் வீடுபுகுந்து தீபக்குமாரை வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் கொலைக்கு வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து எலகங்கா நியூடவுன் போலீசாா் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட 4 மர்மநபர்களையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story