எலகங்காவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை மழைநீர் சூழ்ந்தது ஏன்? - பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் விளக்கம்


எலகங்காவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை மழைநீர் சூழ்ந்தது ஏன்? - பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் விளக்கம்
x
தினத்தந்தி 23 Nov 2021 2:49 AM IST (Updated: 23 Nov 2021 2:49 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு எலகங்காவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை மழைநீர் சூழ்ந்தது ஏன் என்று மாநகராட்சி தலைமை கமிஷனர் விளக்கம் அளித்துள்ளார்.

பெங்களூரு:

130 மில்லி மீட்டர் மழை

  பெங்களூரு எலகங்காவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை மழைநீர் சூழ்ந்துள்ளதது. இதை மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ்குப்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  நேற்று இரவு (நேற்று முன்தினம்) எலகங்காவில் 130 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் எலகங்கா ஏரி நிரம்பி வழிகிறது. ராஜகால்வாயில் அதிக நீர் சென்றதால், அது வெளியே வந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் கேந்திரிய விஹார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை சுற்றிலும் 4 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியுள்ளது.

குடியிருப்புவாசிகள்

  அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 604 வீடுகள் உள்ளன. மொத்தம் 1,600 பேர் வசிக்கிறார்கள். அங்கு மேல்மாடி வீடுகளில் இருப்பவர்களுகு்கு பால், பிஸ்கட், பிரட்டு, மெழுகுவர்த்திகள், குடிநீர் வழங்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 18 குழுக்கள், தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். படகுகள், டிராக்டர்கள் மூலம் குடியிருப்புவாசிகள் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

  மாநகராட்சியின் வருவாய்த்துறை அதிகாரிகளும் அந்த கட்டிடத்திற்கு சென்று அவர்களின் தேவைகள் குறித்த தகவல்களை சேகரித்துள்ளனர். அந்த கட்டிடத்தின் அருகே மருத்துவ குழுக்கள் முகாமிட்டுள்ளன. 8 டாக்டர்கள் அங்கு நியமிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் ஒரு டாக்டர், உதவியாளர் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.

நீரை வெளியேற்ற...

  அந்த கட்டிடத்தை சூழ்ந்துள்ள நீரை கால்வாய் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எலகங்கா ஏரியில் இருந்து ஜக்கூர் ஏரிக்கு செல்லும் கால்வாயின் அகலம் 8 அடி தான் உள்ளது. அதை 33 அடியாக அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசின் அனுமதி கிடைத்தும் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.
  இவ்வாறு கவுரவ்குப்தா கூறினார்.

Next Story