தேன்கனிக்கோட்டை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி அலாரம் ஒலித்ததால் பணம் நகை தப்பியது
தேன்கனிக்கோட்டை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது. இதில் அலாரம் ஒலித்ததால் பணம், நகை தப்பியது.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது. இதில் அலாரம் ஒலித்ததால் பணம், நகை தப்பியது.
கொள்ளை முயற்சி
தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த வங்கி வளாகத்திற்குள் மர்ம நபர்கள் நுழைந்து ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் வங்கியில் பணம் மற்றும் நகைகள் இருந்த இரும்பு பெட்டகத்தை கியாஸ் வெல்டிங் செய்து அவர்கள் உடைக்க முயன்றுள்ளனர். அப்போது அலாரம் ஒலித்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். நேற்று காலை வழக்கம்போல வங்கிக்கு சென்ற காவலாளி ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்துள்ளார். இது குறித்து அவர் வங்கி ஊழியர்கள் மற்றும் கூட்டுறவு சங்க தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் காந்தராஜ் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார்.
விசாரணை
அதன்பேரில் அவர்கள் வங்கிக்கு சென்று பார்த்தபோது அங்கு கொள்ளை முயற்சி சம்பவம் நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வங்கி ஊழியர்கள் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் மற்றும் போலீசார் வங்கிக்கு சென்று தீவிர பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையில் தடயவியல் நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். தொடர்ந்து மோப்ப நாய் பைரவி வரவழைக்கப்பட்டது. இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட கூட்டுறவு சங்க பதிவாளர் முரளிகண்ணன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
நகை, பணம் தப்பியது
வங்கிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்து அதன் பின் கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. கொள்ளை முயற்சியின் போது அலாரம் ஒலி எழும்பியதால் வங்கியில் இருந்த ரூ.2½ கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் தப்பியது. வங்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களின் புகைப்படம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கியில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story