அடிக்கடி பழுதாகும் அரசு பஸ்களால் பயணிகள் அவதி


அடிக்கடி பழுதாகும் அரசு பஸ்களால் பயணிகள் அவதி
x
தினத்தந்தி 23 Nov 2021 8:36 PM IST (Updated: 23 Nov 2021 8:36 PM IST)
t-max-icont-min-icon

அடிக்கடி பழுதாகும் அரசு பஸ்களால் பயணிகள் அவதி

கூடலூர்

மசினகுடியில் அடிக்கடி பழுதாகும் அரசு பஸ்களால் பயணிகள் அவதி அடைந்து வருகிறார்கள். 

அரசு பஸ்கள் 

கூடலூர் அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகம் மூலமாக கூடலூர், பந்தலூர், மசினகுடி மற்றும் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதேபோல் ஊட்டி அரசு போக்குவரத்துக் கழக கிளை அலுவலகம் மூலமாக மசினகுடிக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. 

மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற மக்கள் அத்தியாவசிய மற்றும் அடிப்படை தேவைகளுக்காக பெரும்பாலும் கூடலூர் அல்லது ஊட்டிக்கு தினமும் சென்று வருகிறார்கள். இதேபோல் பள்ளி மற்றும் கல்லூரி, மாணவ-மாணவிகளும் அரசு பஸ்கள் மூலம் சென்று வருகின்றனர். 

அடிக்கடி பஞ்சர்  

இந்த நிலையில் மசினகுடிக்கு இயக்கப்படும் பஸ்கள் அடிக்கடி பழுது அல்லது பஞ்சராகி நடுவழியில் நின்று வருகிறது. இதனால் இந்த பஸ்களில் பயணிக்கும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அரசு பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது குறித்து மேலும் அவர்கள் கூறியதாவது:- 

அரசு போக்குவரத்து கழக பணிமனைகளுக்கு உதிரிபாகங்கள் வழங்கப் படாததால் பராமரிப்பின்றி பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் மசினகுடியில் இருந்து ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகள் வழியாக கூடலூர் வந்து  கொண்டு இருந்தது. அப்போது அந்தபஸ் பஞ்சரானதால் நடுவழியில் நின்றது. 

பராமரிக்க வேண்டும் 

இதனால் அந்த பஸ்சில் பயணித்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். பின்னர் அவர்கள் மாற்று பஸ்சை பிடித்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. 

எனவே இங்கு இயக்கப்படும் பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story