திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரியை புனரமைக்க வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரியை புனரமைக்க வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி:-
திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரியை புனரமைக்க வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கஜா புயலால் சேதம்
திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு கலை- அறிவியல் கல்லூரி கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலால் சீர்குலைந்தது. வகுப்பறை கதவுகள், முன்பக்க கண்ணாடிகள் உடைந்த நிலையில் காணப்படுகிறது. மின்சாதனங்கள் சேதம் அடைந்து, பாதுகாப்பற்ற நிலையில் கல்லூரி உள்ளதாக மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கல்லூரியில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக பொதுப்பணித்துறையின் மூலம் சேதமதிப்பீடு தயார் செய்யப்பட்டு பல்கலைக்கழகம் மூலமாக அரசுக்கு அனுப்பி 3 ஆண்டுகளாகியும், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே கல்லூரியில் உடனடியாக புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கல்லூரி வளாக சாலையை மேம்படுத்த வேண்டும்.
வகுப்புகள் புறக்கணிப்பு
கல்லூரி கட்டிடம் கட்டுவதற்கு வாங்கப்பட்ட இடத்தில் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றி, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கல்லூரி கிளை நிர்வாகி சுஜிபாலன் தலைமை தாங்கினார். குணால் முன்னிலை வகித்தார். மாணவர் பெருமன்ற மாவட்ட தலைவர் வீரபாண்டியன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் மாவட்ட துணைத்தலைவர் பாரதிசெல்வன், இளைஞர் பெருமன்ற நகர குழு உறுப்பினர் கீர்த்தி, கல்லூரி கிளை நிர்வாகிகள் ராகவேந்திரா, குணசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story