மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக வாலிபர் மீது புகார்


மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக வாலிபர் மீது புகார்
x
தினத்தந்தி 23 Nov 2021 10:42 PM IST (Updated: 23 Nov 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே 15 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்தார். மயக்க மருந்து கொடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க குழந்தைகள் நலக்குழு பரிந்துரை செய்துள்ளது.

தேனி:

சிறுமிக்கு பிரசவம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் பிரசவத்துக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 11-ந்தேதி சிறுமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

 சிறுமியின் எதிர்கால நலன் கருதி அந்த குழந்தையை, குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்க சிறுமியும், சிறுமியின் பெற்றோரும் முடிவு செய்தனர். இதையடுத்து அந்த குழந்தை தேனி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டது.

பாலியல் பலாத்காரம்

அந்த குழந்தையை பராமரிப்பதற்காக, தூத்துக்குடியில் உள்ள தத்து மைய நிர்வாகிகளிடம், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜா நேற்று ஒப்படைத்தார்.

இந்த சிறுமி கர்ப்பிணியானது எப்படி என்பது குறித்து சிறுமியிடம் குழந்தைகள் நலக்குழுவினர் விசாரித்தனர். 

அப்போது அந்த சிறுமி, "எங்கள் ஊரைச் சேர்ந்த 28 வயது வாலிபர் சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். அது தெரியாமல் சாப்பிட்ட நான் மயங்கி விட்டேன். மயக்கத்தில் இருந்த என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். பயம் காரணமாக இதை பெற்றோரிடம் கூறவில்லை. 7 மாத கர்ப்பமாக இருந்தபோது எனது தாய் டாக்டரிடம் அழைத்து சென்று பரிசோதனை செய்ததால் கர்ப்பிணியாக இருப்பதாக தெரியவந்தது" என்று எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் அளித்தார்.

இது குழந்தைகள் நல குழுவினரை அதிர்ச்சி அடைய செய்தது. இதையடுத்து சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டருக்கு, குழந்தைகள் நலக் குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர்.

மற்றொரு குழந்தை

இந்தநிலையில் பெற்றோரால் வளர்க்க முடியாமல், பிறந்து 24 நாட்களேயான பெண் குழந்தையும் மாவட்ட குழந்தைகள் நல குழுவினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. 

அந்த குழந்தையின் தாய் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால், குழந்தையை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தையின் தந்தை அந்த குழந்தையை மாவட்ட குழந்தைகள் நல குழுவில் ஒப்படைத்தார். அந்த குழந்தையும் பராமரிப்பு கருதி தத்துவ மையத்தில் நலக் குழுவினரால் ஒப்படைக்கப்பட்டது.

Next Story