சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவு


சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவு
x
தினத்தந்தி 23 Nov 2021 10:57 PM IST (Updated: 23 Nov 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவுபெற்றது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. 

மேலும் விழா நாட்களில் மாடவீதியில் நடைபெறும் தேரோட்டம், சாமி வீதி உலா ஆகியவை ரத்து செய்யப்பட்டு, கோவிலின் 5-ம் பிரகாரத்திலேயே நடைபெற்றது.

கடந்த 19-ந்தேதி விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் கோவிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. அன்று அதிகாலையில் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் கடந்த 20-ந்தேதி சந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், 21-ந்தேதி பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும், நேற்று முன்தினம் சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடந்தது.

நேற்று சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவு பெற்றது. இதையொட்டி நேற்று இரவு கோவில் வளாகத்தில் உள்ள 5-ம் பிரகாரத்தில் சிறப்பு அலங்காரத்தில் சண்டிகேஸ்வரர் உலா நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Next Story