குடியாத்தத்தில் மழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


குடியாத்தத்தில் மழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 23 Nov 2021 11:10 PM IST (Updated: 23 Nov 2021 11:10 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தத்தில் மழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கி உள்ள பொதுமக்கள் மாற்று இடம் வழங்கக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியாத்தம்
-
குடியாத்தத்தில் மழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கி உள்ள பொதுமக்கள் மாற்று இடம் வழங்கக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முகாம்களில் தங்கவைப்பு

குடியாத்தம் மோர்தானா அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் குடியாத்தம் நகரின் நடுவே செல்லும் கவுண்டன்யமகாநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றங்கரை பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் 11 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குடியாத்தம் ெகங்கை அம்மன் கோவில் ஆற்றோரம் பகுதியில் சுமார் 50-க்கும் அதிகமான குடிசைகளை வெள்ளம் சூழ்ந்து அங்கு தங்கியிருந்த 150-க்கும் மேற்பட்டவர்கள் கெங்கையம்மன் கோவில் அன்னதான கூடம் மற்றும் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த 6 நாட்களாக தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன.
 
சாலை மறியல்

இந்தநிலையில் அங்கு தங்கி இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலையில் கோபாலபுரம் தண்ணீர் தொட்டி அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாசில்தார் லலிதா, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட வருவாய் துறையினர், காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் வெள்ளம் வடிந்த பின் எங்களை அனுப்பினால் எங்களுக்கு மாற்று இடம் இல்லை எனவும், உடனடியாக வேறு இடத்தில் தங்க ஏற்பாடு செய்து தரவேண்டும் எனவும், நிரந்தரமாக பாதுகாப்பாக தங்க மாற்று இடம் செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

அதற்கு உடனடியாக உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதிக்கப்பட்டவர்கல் பற்றி  கணக்கெடுப்பு நடத்திய பின் வீட்டுமனை மற்றும் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தரப்படும் என அமல் விஜயன் எம்.எல்.ஏ. உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து 45 நிமிடங்களாக நடைபெற்ற சாலை மறியல் கைவிடப்பட்டது.

Next Story