பொருட்கள் வாங்காமலே வாங்கியதாக வந்த குறுஞ்செய்தி: ரேஷன் கடையை இழுத்து மூடி பொதுமக்கள் போராட்டம் திட்டக்குடி அருகே பரபரப்பு
திட்டக்குடி அருகே பொருட்கள் வாங்காமலே வாங்கியதாக வந்த குறுஞ்செய்தியால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் ரேஷன் கடையை இழுத்து மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டக்குடி,
திட்டக்குடி அடுத்த நெடுங்குளம் கிராமத்தில் ரேஷன் உடை உள்ளது. இந்த கடையின் மூலம் பொருட்களை பெற்று வரும் குடும்ப அட்டைதாரர்களின் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி ஒன்று சென்றது.
அதில், கடையில் இருந்து வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை அவரவர் பெற்று கொண்டதாகவும், தற்போது கடையில் அரிசி, சர்க்கரை மட்டும் இருப்பு உள்ளதாகவும், மற்ற பொருட்கள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டு இருந்தது.
முற்றுகை
இதனால் அதிர்ச்சியடைந்த, அப்பகுதி மக்கள் நேற்று காலை ரேஷன் கடைக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அப்போது, அங்கிருந்த விற்பனையாளரிடம், நாங்கள் பொருட்கள் வாங்காமல் உள்ளோம், ஆனால் பொருட்கள் வாங்கி இருப்பதாக குறுஞ்செய்தி வந்தது எப்படி என்று கூறி வாக்குவாதம் செய்தனர்.
அப்போது ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்ற பொதுமக்கள் விற்பனையாளரை கடையில் இருந்து வெளியேற்றி விட்டு, கடையை இழுத்து மூடினர்.
விசாரணை நடத்தப்படும்
இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த திட்டக்குடி வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும். மேலும் அனைத்து பொருட்களும் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.இதையடுத்து போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story