குமாரபாளையம் அருகே மீன்பிடிக்க சென்ற தொழிலாளி மாயம்-காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டாரா? போலீசார் விசாரணை


குமாரபாளையம் அருகே மீன்பிடிக்க சென்ற தொழிலாளி மாயம்-காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டாரா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 23 Nov 2021 11:59 PM IST (Updated: 23 Nov 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

குமாரபாளையம் அருகே மீன்பிடிக்க சென்ற தொழிலாளி மாயமானார். அவர் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே உள்ள சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 46). கூலித்தொழிலாளியான இவர் அடிக்கடி காவிரி ஆற்றில் மீன் பிடிக்க செல்வது வழக்கம். அதேபோல் நேற்று மீன் பிடிப்பதற்காக காவிரி ஆற்றுக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனிடையே அவருடைய மனைவி லட்சுமி (36) குமாரபாளையம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது கணவர், ஆற்றில் வெடி போட்டு மீன் பிடிப்பது வழக்கம். அதேபோல் தற்போதும் வெடி மருந்துடன் காவிரி ஆற்றுக்கு சென்ற அவர் திரும்பி வரவில்லை. அவர் வழக்கமாக மீன் பிடிக்கும் இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கு அவரை காணவில்லை. எனவே அவரை கண்டுபிடித்து தாருங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து லட்சுமணன் மாயமானது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், காவிரி ஆற்றங்கரை பகுதியில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் மீன்பிடிக்க சென்ற தொழிலாளி, காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story