1 மணி நேரம் பலத்த மழை
சிவகாசியில் நேற்று 1 மணி நேரம் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிவகாசி,
சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை 1 மணி நேரம் நகரின் பல்வேறு இடங்களில் பலத்த இடியுடன் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. அந்த வழியாக நடந்து சென்றவர்களும், இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கடந்த 1 வருடத்துக்கு முன்னர் சிவகாசி நகர பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் இணைப்புகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அந்த பணிகள் முழுமையாக முடிந்த பின்னர் சாலையை சீரமைக்கும் பணியை மேற்கொள்ள வில்லை என்று கூறப்படுகிறது. தற்போது அந்த பகுதியில் அதிகளவில் தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதே போல் நகர் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்கள் அனைத்திலும் மண் நிறைந்து இருப்பதால் தண்ணீர் செல்ல போதிய வசதி இல்லாததால் மழைநீர் மற்றும் கழிவுநீர் ரோடுகளில் குளம் போல் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story