கியாஸ் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி


கியாஸ் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி
x
தினத்தந்தி 24 Nov 2021 1:10 AM IST (Updated: 24 Nov 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

கியாஸ் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி

சேலம், நவ.24-
சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் விட்டல் 3-வது தெருவில் வசித்து வந்தவர் பத்மநாபன் (வயது 49). இவர் சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் சிறப்பு நிலைய அலுவலராக பணியாற்றி வந்தார். 
அவருடைய மனைவி தேவி (38). அவர்களுடைய மகன் லோகேஷ் (18).
பத்மநாபன் வீட்டையொட்டி வெங்கட்ராஜன் (62) என்பவருக்கு சொந்தமான வீடுகள் உள்ளன. அந்த வீடுகளை அவர் வாடகைக்கு விட்டுள்ளார். கீழ் தளத்தில் கோபி (58) என்பவர் தனது தாய் ராஜலட்சுமி (80), மாமியார் எல்லம்மாள் (90) ஆகியோருடன் வசித்து வருகிறார். கோபி கருங்கல்பட்டி பகுதியில் பலகார கடை நடத்தி வருகிறார்.
கியாஸ் சிலிண்டர் வெடித்தது
முதல் மாடியில் முருகன் (46) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி உஷாராணி. இவர் மாவு அரைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு கார்த்திக்ராம் (18) என்ற மகனும், பூஜா ஸ்ரீ (10) என்ற மகளும் உள்ளனர். இதில் பிளஸ்-2 முடித்துள்ள கார்த்திக்ராம் டி.பார்ம் படிப்புக்காக விண்ணப்பித்துள்ளார். பூஜா ஸ்ரீ அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
முருகன் வீட்டையொட்டி ஜவுளி வியாபாரியான கணேசன் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவரது வீட்டையொட்டி மோகன்ராஜ் என்பவர் குடும்பத்துடன் வசிக்கிறார். இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணி அளவில் கோபியின் வீட்டில் அவரது தாய் ராஜலட்சுமி காபி போடுவதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் கண்இமைக்கும் நேரத்தில் கோபி, பத்மநாபன், முருகன், கணேசன், வெங்கட்ராஜன், மோகன்ராஜ் ஆகியோரது 6 வீடுகளும் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
இடிபாடுகளுக்குள் சிக்கினர்
மேலும் அங்கிருந்து கற்கள் பறந்து வந்து எதிரே உள்ள வீடுகள் மீதும், சாலையில் நின்றவர்கள் மீதும் விழுந்தன. ேமலும் 6 வீடுகளிலும் வசித்து வந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர். இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். 
இது குறித்து தகவல் அறிந்தும் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் வேலு, உதவி அலுவலர் முருகேசன் ஆகியோரது தலைமையில் செவ்வாய்பேட்டை, சூரமங்கலம், வாழப்பாடி ஆகிய இடங்களில் இருந்து 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா, துணை போலீஸ் கமிஷனர் மாடசாமி ஆகியோரது தலைமையிலும் ஏராளமான போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.
மூதாட்டி பலி
இதையடுத்து தீயில் கருகி படுகாயம் அடைந்த கோபியை தீயணைப்பு வீரர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதைதொடர்ந்து இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்த கோபியின் தாய் ராஜலட்சுமி, கணேசன், அவருடைய மகன் சுதர்சன், தீயணைப்பு நிலைய அலுவலர் பத்மநாபனின் மகன் லோகேஷ், முருகன், உஷாராணி, வீட்டின் உரிமையாளர் வெங்கட்ராஜன், அவருடைய மனைவி இந்திராணி (54), மோகன்ராஜ், நாகசுதா, கோபால் (70), தனலட்சுமி (64) ஆகிய 12 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆஸ்பத்திரியில் மூதாட்டி ராஜலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து கோபி உள்பட 12 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இடிபாடுகளுக்குள் பத்மநாபன், அவருடைய மனைவி தேவி, முருகனின் மகன் கார்த்திக்ராம், மகள் பூஜாஸ்ரீ ஆகியோர் சிக்கி இருந்தது தெரியவந்தது. அவர்களை காப்பாற்றும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். அவர்களில் சிறுமி பூஜா ஸ்ரீயின் அழுகுரல் மட்டும் கேட்டது.
சிறுமி உயிருடன் மீட்பு
இதைத்தொடர்ந்து 2 பொக்லைன் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டது. காலை 11.55 மணி அளவில் சிறுமி பூஜா ஸ்ரீயை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். 
சிறுமிக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்ததால் உடனடியாக சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இடிபாடுகளுக்குள் சிக்கிய மற்றவர்களிடம் இருந்து எந்த சத்தமும் வராததால் அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர்.
கலெக்டர், ஆணையாளர்
இதனிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சேலம் கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி, எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியம், ரா.அருள், பா.ஜனதா கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, காங்கிரஸ் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர் மற்றும் அதிகாரிகளும், கட்சி நிர்வாகிகளும் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். 
தீயணைப்பு வீரர்கள் தெர்மல் இமெஜ் என்ற நவீன கேமராவை கட்டிட இடிபாடுகளுக்குள் செலுத்தி சோதித்தனர். மேலும் பத்மநாபனின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். அப்போது அவர் வைத்திருந்த செல்போன் ரிங்டோன் மூலம் எங்கு சிக்கி உள்ளார்? என்பதை அறிந்தனர். அந்த சத்தத்தை வைத்து அங்கிருந்த சுவர் அகற்றப்பட்டது.
உடல்கள் மீட்பு
இதையடுத்து சுமார் 6½ மணி நேரத்துக்கு பிறகு தீயணைப்பு நிலைய அதிகாரி பத்மநாபனின் உடலை வீரர்கள் வெளியே மீட்டு வந்தனர். அப்போது அங்கிருந்த அவருடைய உறவினர்கள் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. அதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் பத்மநாபனின் மனைவி தேவியின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே எடுத்தனர். இதையடுத்து முருகனின் மகன் கார்த்திக்ராமினின் உடலும் மீட்கப்பட்டது.
முதலில் கட்டிட இடிபாடுகளுக்குள் 4 பேர் மட்டுமே சிக்கி இருந்ததாக தகவல் வந்தது. ஆனால் கோபியின் மாமியார் எல்லம்மாள் என்பவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தது பின்னர் தான் தெரியவந்தது. அதாவது, அவருடைய கால் துண்டான நிலையில் அங்கு கிடந்தது. பின்னர் எல்லம்மாள் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். தொடர்ந்து இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதன் மூலம் இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
பேரிடர் மீட்பு படையினர்
முன்னதாக இடிந்து விழுந்த வீடுகளில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வரப்பட்டன. மேலும் சம்பவ இடத்துக்கு அரக்கோணத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்ட தேசிய  பேரிடர் மீட்பு படையினர் வந்து ஆய்வு செய்தனர். கியாஸ் சிலிண்டர் வெடித்தது குறித்து தகவல் கிடைத்ததும் கருங்கல்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் அங்கு திரண்டனர்.
பொதுமக்களால் மீட்பு பணிக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக பாண்டுரங்கன் விட்டல் 2 மற்றும் 3-வது தெருக்களின் எல்லையில் போலீசார் கயிறுகளை கட்டி யாரையும் உள்ளே விடாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கியாஸ் சிலிண்டர் வெடித்து 6 வீடுகள் இடிந்து தரைமட்டமான விபத்தில் தீயணைப்பு நிலைய அதிகாரி உள்பட 5 பேர் பலியானதுடன், சிறுமி உள்பட 13 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story