காதல் திருமண ஜோடியை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது
காதல் திருமண ஜோடியை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது
பனைக்குளம்
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் விக்டோரியா நகரைச் சேர்ந்த ஜான்ஸ்டீன். இவரது மகன் மேக்டன் வினித் (வயது 21). விக்டோரியா நகரைச் சேர்ந்த சுரேஷ் மகள் பில்கேஷி (22). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இருவரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். கோவை சென்ற இருவரும் கடந்த 21-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் பாதுகாப்பு கோரி ராமநாதபுரம் மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். இருவரது பெற்றோரை அழைத்து போலீசார் சமரசம் பேசினர். இவர்களது திருமணத்தை மாப்பிள்ளை வீட்டார் ஏற்றுக்கொண்டனர். பெண் வீட்டாருக்கு உடன்பாடில்லை. காதல் திருமண ஜோடிக்கு எவ்வித பிரச்சனையும் செய்யமாட்டோம் என எழுதி கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து, வினித், பில்கேஷி மற்றும் அவரின் உறவினர்கள் ராமநாதபுரத்தில் இருந்து அரசு பஸ்சில் தங்கச்சிமடம் புறப்பட்டனர். இந்த பஸ் மண்டபம் பஸ் நிலையம் வந்தபோது, அங்கு காரில் காத்திருந்த 4 பேர் அரிவாளுடன் பஸ்சில் ஏறி வினித், பில்கேஷி ஆகியோரை வெட்டினர். இதைத்தடுக்க முயன்ற ஜான்ஸ்டீன், குளோரி ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு பஸ் நிறுத்தத்தில் நின்றவர்கள் அவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அரிவாள் வெட்டில் காயமடைந்த 4 பேரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து மண்டபம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணின் உறவினர்களான தங்கச்சிமடத்தைச் சேர்ந்த யாகப்பா, ரஸ்புதின், சுரேஷ், சூசல் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story