ராட்சத கிரேன் மூலம் இரும்பு மிதவை மீட்பு


ராட்சத கிரேன் மூலம் இரும்பு மிதவை மீட்பு
x
தினத்தந்தி 24 Nov 2021 1:13 AM IST (Updated: 24 Nov 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

பாம்பன் ரெயில் பாலத்தின் அருகே மோதுவது போல் நெருங்கி வந்த மிதவை ராட்சத கிரேன் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

ராமேசுவரம்
பாம்பன் ரெயில் பாலத்தின் அருகே மோதுவது போல் நெருங்கி வந்த மிதவை ராட்சத கிரேன் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
ரெயில் போக்குவரத்து
ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. அதுபோல் தற்போது உள்ள ரெயில் பாலத்தின் அருகில் சுமார் 50 மீட்டர் தூரத்தில் உள்ள வடக்கு கடல் பகுதியில் ரூ.400 கோடி நிதியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. 
இதனிடையே பாம்பன் கடலில் புதிய ரெயில் பால பணிகளுக்காக கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரும்பினாலான மிதவை ஒன்று நேற்று முன்தினம் இரவு கடல் நீரோட்டத்தின் வேகத்தால் தற்போது உள்ள பாம்பன் ரெயில் பாலம் அருகே தூணின் மீது மோதுவது போல் பாறை மீது ஏறி நின்றது. ரெயில் பாலத்தின் தூண்களுக்கு எந்த ஒரு சேதமும் பாதிப்பும் இல்லாததால் நேற்று வரையிலும் பாம்பன் ரெயில் பாலம் வழியாக வழக்கம்போல் ரெயில் போக்குவரத்து பயணிகளுடன் இயக்கப்பட்டன.
மீட்பு
இந்த நிலையில் பாம்பன் ரெயில் பாலம் அருகே 13-வது தூணின் மீது மோதுவது போல் நின்று வரும் இரும்பு மிதவை மீட்கும் பணியானது இரண்டாவது நாளாக நேற்றும் நடைபெற்றது. பாலம் அருகே பாறை மீது ஏறி நிற்கும் மிதவையில் உள்ள தண்ணீரை 4 மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது. 
இதைதொடர்ந்து அந்த இரும்பு மிதவையானது நேற்று ராட்சத கிரேன் மூலம் பாதுகாப்பாக மீட்டு தூக்கப்பட்டு புதிய ரெயில் பாலத்தின் பணிகளுக்காக கற்களால் அமைக்கப்பட்டுள்ள கரைமீது பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டது. இரும்பு மிதவை ரெயில் பாலத்தின் மீது தூண்களில் அதிர்ஷ்டவசமாக மோதாததால் ரெயில் பாலம் தப்பியது. இதனால் ரெயில்வே அதிகாரிகளும், பயணிகளும் நிம்மதி அடைந்துள்ளனர்.

Next Story