தேர்த்தங்கல் சரணாலயத்தில் பறவைகளை வேட்டையாடுவதை தடுக்க வனத்துறை கண்காணிப்பு பணி


தேர்த்தங்கல் சரணாலயத்தில் பறவைகளை வேட்டையாடுவதை தடுக்க வனத்துறை கண்காணிப்பு பணி
x
தினத்தந்தி 24 Nov 2021 1:13 AM IST (Updated: 24 Nov 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் ஏராளமான பறவைகள் வரத் தொடங்கி உள்ளதால் வேட்டையாடுவதை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம்
தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் ஏராளமான பறவைகள் வரத் தொடங்கி உள்ளதால் வேட்டையாடுவதை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சரணாலயம்
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தேர்த்தங்கல் கிராமம். இந்த கிராமத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் பறவைகள் சரணாலயம் ஒன்றும் அமைந்துள்ளது. அது போல் ஆண்டுதோறும் இந்த பறவைகள் சரணாலயத்திற்கு அக்டோபர் மாதம் முதல் ஏராளமான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பறவைகள் வருவது வழக்கம். இவ்வாறு வரும் பறவைகள் ஏப்ரல் மாதம் மீண்டும் திரும்பிச் செல்லும்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரளவு நல்ல மழை பெய்து வருவதால் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் ஏற்கனவே இருந்த நீரின் அளவைவிட தற்போது மேலும் அதிகரித்துள்ளது. சரணாலய நீர்நிலைகளில் தண்ணீர் அதிகம் உள்ளதால் இந்த ஆண்டும் பறவைகள் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து வரத்தொடங்கி விட்டன. இதுவரையிலும் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பலவிதமான பறவைகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் கூழைக்கிடா, கரண்டிவாயன், வெள்ளை நத்தை கொத்தி, செங்கால் நாரை, சாம்பல் நிற நாரை உள்ளிட்ட ஏராளமான பறவைகள் வந்துள்ளன. 
கண்காணிப்பு
இதனிடையே இந்த ஆண்டு பறவைகள் சீசன் தொடங்கி உள்ளதால் தேர்த்தங்கல் பறவைகளை சரணாலயத்தில் பறவைகள் வேட்டையாடுவதை கண்காணித்து தடுக்கும் பணியில் வனச்சரகர் வெங்கடேஷ் மேற்பார்வையில் வனவர், வனக்காப்பாளர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் இணைந்து இரவு பகலாக தீவிரமாக பறவைகள் சரணாலய பகுதியில் ரோந்து சுற்றியபடி கண்காணித்து வருகின்றனர். சரணாலயத்தின் உள்ளே உள்ள நீர்நிலைகளில் யாரேனும் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா என்பதை பைனாகுலர் மூலம் கண்காணித்து வருகின்றனர். 
பறவைகளை கண்காணிக்கும் பணியில் வனத்துறை மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களோடு அந்த கிராம மக்களும் இணைந்து பணியாற்றி வருவதுடன் பறவைகளை பாதுகாப்பதில் கிராம மக்களும் வனத்துறையினருக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இதே பறவைகள் சரணாலயத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் வந்துள்ளதால் இந்த ஆண்டு சீசன் தற்போது தான் தொடங்கியுள்ளதால் இன்னும் அதிகமான பறவைகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Next Story