குடியிருப்பு பகுதிகளில் குளம்போல் தேங்கிய தண்ணீர்


குடியிருப்பு பகுதிகளில் குளம்போல் தேங்கிய தண்ணீர்
x
தினத்தந்தி 24 Nov 2021 1:13 AM IST (Updated: 24 Nov 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி பகுதியில் நேற்று மதியம் திடீரென பலத்த இடியுடன் கூடிய மழை ஒரு மணி நேரத்திற்கு மேல் பெய்ததால் குடியிருப்பு பகுதியில் குளம் போல் மழைநீர் தேங்கி கிடந்தது.

காரைக்குடி
காரைக்குடி பகுதியில் நேற்று மதியம் திடீரென பலத்த இடியுடன் கூடிய மழை ஒரு மணி நேரத்திற்கு  மேல் பெய்ததால் குடியிருப்பு பகுதியில் குளம் போல் மழைநீர் தேங்கி கிடந்தது.
இடியுடன் மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதையொட்டி பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருவதால் பல்வேறு கண்மாய்கள், ஆறுகள், ஏரிகள் நிரம்பி மறுகால் செல்கிறது. மேலும் பல்வேறு இடங்களில் குடியிறுப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதை அகற்றும் பணியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்த வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதையொட்டி கடந்த 10 நாட்களுக்கும் மேல் இரவு, பகலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. 
மேலும் தொடர்ந்து பெய்து வரும்  மழையை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் விவசாயிகள் விவசாய பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மற்றும் மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர் மழை காரணமாக ஏற்கனவே பயிரிட்ட நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது.
தொற்று நோய் பரவும் அபாயம்
இந்தநிலையில் காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியிலும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்தது. நேற்று காலை வழக்கம் போல் வானம் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில் மதியம் 1 மணிக்கு திடீரென இடியுடன் கூடிய மழை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. காளவாய்பொட்டல் தந்தை பெரியார் நகர் பகுதியில் குடியிருப்பு பகுதியை தண்ணீர் சூழ்ந்து குளம் போல் தேங்கி நின்றது. தேவகோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியிலும் நேற்று அவ்வப்போது மழை பெய்து வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளதால் சுகாதாரத்துறையினர் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story