கைதான 2 சிறுவர்கள் திருச்சி கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு


கைதான 2 சிறுவர்கள் திருச்சி கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு
x
தினத்தந்தி 24 Nov 2021 1:16 AM IST (Updated: 24 Nov 2021 1:16 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை அருகே சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் கைதான 2 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை
திருச்சி மாவட்டம், நவல்பட்டு போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன், ஆடு திருடர்களை மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்று பிடிக்க முயன்ற போது புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே பள்ளத்துப்பட்டியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
மேலும், தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தியதில் சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ததாக தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே உள்ள தோகூரை சேர்ந்த மணிகண்டன்(வயது 19) மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் அனப்பபட்டியை சேர்ந்த 14 வயது சிறுவனும், கே.புதுப்பட்டி அருகே வடகாட்டுப்பட்டியை சேர்ந்த 9 வயது சிறுவனும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இந்த சிறுவர்களில் ஒருவன் 9-ம் வகுப்பும், மற்றொருவன் 5-ம் வகுப்பும் படித்து வருவது தெரியவந்தது. ஆடு திருடி வந்தபோது மடக்கி பிடித்ததால் கைதாகி விடுவாமோ என்ற அச்சத்தில் சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ததாக மணிகண்டன் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
கூர்நோக்கு இல்லத்தி்ல் அடைப்பு
இந்தநிலையில், கைதான மணிகண்டனை கீரனூர் கோர்ட்டு நீதிபதி முன்பு நேற்று முன்தினம் இரவு போலீசார் ஆஜர்படுத்தினர். இதில் மணிகண்டனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி பிச்சைராஜ் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மணிகண்டனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருமயம் சிறையில் அடைத்தனர். 
மற்ற 2 சிறுவர்களும் புதுக்கோட்டை இளைஞர் நீதிக்குழுமம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி கூர்நோக்கு இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு அடைக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் அடுத்தகட்ட பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே கொலையாளிகளை கைது செய்த தனிப்படையினரை தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் வைத்து பாராட்டினார்.

Next Story