மின்சாரம் தாக்கி 2 பேர் பலி
நாகர்கோவிலில் பாழடைந்த வீட்டில் மின் கம்பியை திருட முயன்ற போது மின்சாரம் தாக்கி 2 பேர் இறந்தனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் பாழடைந்த வீட்டில் மின் கம்பியை திருட முயன்ற போது மின்சாரம் தாக்கி 2 பேர் இறந்தனர்.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
2 பிணங்கள்
நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சாலையில் இருந்து மாநகராட்சி அலுவலகத்துக்கு செல்லும் மீட் தெருவில் ஒரு பாழடைந்த வீடு உள்ளது. அந்த வீட்டின் முன்புற நுழைவு வாயில் பூட்டப்பட்டிருந்த நிலையில் வீட்டு வளாகத்தின் முன்பகுதியில் நேற்று காலை 2 வாலிபர்கள் பிணமாக கிடந்தனர்.
இந்த சம்பவம் நடந்த வீட்டின் அருகே மாநகராட்சி அலுவலகம், வணிகவரித்துறை அலுவலகம், வருமானவரித்துறை அலுவலகம் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை அமைந்திருப்பதால் ஏராளமானோர் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. இதனால் மீட் தெரு பரபரப்புடன் காட்சி அளிப்பது வழக்கம். இதனால் அந்த வழியாக வந்து சென்றவர்கள், 2 வாலிபர்கள் பிணமாக கிடப்பதை பார்த்தபடி சென்றனர். சிலர் கூட்டமாக கூடிநின்று வேடிக்கை பார்த்தனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அடையாளம் தெரிந்தது
இதுகுறித்து போலீசாருக்கும் சிலர் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நாகர்கோவில் வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது அந்த பாழடைந்த வீட்டு வளாகத்தில் மண்டிக்கிடந்த புதர்களுக்கிடையே 2 பேர் பிணமாக கிடந்தனர். அவர்கள் கை, கால்களில் மின்சாரம் பாய்ந்ததற்கான காயங்கள் இருந்தது. இதையடுத்து போலீசார் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மின் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அப்பகுதியில் மின் வினியோகத்தை நிறுத்தினர்.
பின்னர் வாலிபர்கள் 2 பேரின் உடலையும் போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதில் பிணமாக கிடந்தவர்கள் நாகர்கோவில் கோட்டார் பறக்கிங்கால் பகுதியைச் சேர்ந்த டோன் போஸ்கோ (வயது 20), கருங்கல் தொலையாவட்டம் பகுதியைச் சேர்ந்த ஜான் கிறிஸ்டோபர் என்ற ராபர்ட் ( 35) என்பது தெரிய வந்தது.
கொலை வழக்கு
இவர்களில் ராபர்ட் மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டோன் போஸ்கோ மீது திருட்டு, அடி-தடி உள்ளிட்ட வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:-
டோன் போஸ்கோவும், ராபர்ட்டும் நண்பர்கள் ஆவர். இவர்கள் 2 பேருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் 2 பேரும் காப்பர் வயர்களை திருடி விற்பதை தொழிலாக செய்து வந்துள்ளனர். இதேபோல்தான் நேற்று முன்தினம் மாலையில் பாழடைந்த வீட்டுக்குள் சுவர் ஏறிக்குதித்துச் சென்றுள்ளனர். அங்கு மின்கம்பியை திருடிய அவர்கள், அங்கிருந்த ஸ்டே கம்பி ஒன்றையும் வெட்டி எடுக்க முயன்றுள்ளனர்.
பரபரப்பு சம்பவம்
அப்போது அந்த கம்பி மேலே சென்ற மின்கம்பியில் உரசியிருக்கிறது. இதனால் மின்சாரம் பாய்ந்து அந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் இரவு நேரத்தில் நடந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது. அவர்கள் திருடச் சென்ற வீடு இருளாக இருந்ததாலும், இரவு நேரத்தில் அப்பகுதியில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்ததாலும் அவர்கள் 2 பேரும் மின்சாரம் தாக்கி இறந்தது யாருக்கும் தெரியவில்லை. நேற்று காலையில் அப்பகுதி வழியாக சென்றவர்கள் பார்த்தபிறகுதான் தெரிய வந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் நாகர்கோவில் துணை சூப்பிரண்டு நவீன்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். பின்னர் 2 வாலிபர்களின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின் கம்பியை திருடச்சென்றபோது மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story